சிம்லா: முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்காக வாங்கப்பட்ட சமோசாக்களை பிறர் உண்டது தொடர்பாக சிஐடி விசாரணை நடைபெற்ற நிலையில், பாஜகவின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பிரிவினர் முதல்வரின் படத்துக்கு சமோசா ஊட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கடந்த அக்டோபர் 21-ம் தேதி சிஐடி தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்குவதற்காக வாங்கிவரப்பட்ட சமோசாக்களை பிறர் உண்டுள்ளனர். இந்நிலையில், இது எவ்வாறு நடந்தது என்பதை அறியும் பொருட்டு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில், "இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) அதிகாரி ஒருவர், சிம்லாவின் லக்கர் பஜாரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து முதல்வருக்காக உணவு வாங்கும்படி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) மற்றும் ஒரு தலைமைக் காவலர் ஓட்டுநர் ஆகியோர் மூன்று சமோசாக்கள் மற்றும் கேக்குகளை வாங்கி வந்தனர். அதனை அவர்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்தனர். அந்த அதிகாரி, அவை யாருக்கானவை என்பது பற்றி அறியாமல் அந்த உணவு பாக்ஸ்களை, மூத்த அதிகாரியின் அறையில் வைக்குமாறு அறிவுறுத்தினார்.
இதனிடையே, முதல்வரின் ஊழியர்களுக்கு டீ மற்றும் பான் போன்றவற்றை வழங்க மோட்டார் போக்குவரத்து அதிகாரி மற்றும் தலைமை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. பாக்ஸ்களில் இருந்த பொருட்கள் முதல்வருக்கானவை என்பது தெரியாத பெண் இன்ஸ்பெக்டர், பாக்ஸ்களை திறக்காமல், அவற்றை மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு அனுப்பினார்.
அந்த பாக்ஸ்கள் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமை காவலரால் திறக்கப்பட்டு, அறையில் இருந்த 10-12 பேருக்கு டீயுடன் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்தப் பெட்டிகளில் இருந்தது முதல்வருக்கானது என்பது ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டரின் மேற்பார்வையில் இருந்த அந்த பாக்ஸ்கள் உரிய அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவை கவனக்குறைவாக முதல்வரின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமோசா தொடர்பாக சிஐடி விசாரணை நடத்தி அறிக்கை அளித்த விஷயம் வெளியே வந்ததை அடுத்து, முதல்வரை பாஜக கேலி செய்து வருகிறது. இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அப்படி எதுவும் இல்லை. தவறு எங்கே நடந்தது என்பது பற்றிய விசாரணை அது. ஆனால் ஊடகங்கள்தான் அதனை 'சமோசா' பற்றியது என செய்திகளை வெளியிடுகிறீர்கள்" என்று கூறினார்.
மேலும், இது சிஐடியின் உள் விவகாரம் என்றும், இதை அரசியலாக்கக் கூடாது என்றும் சிஐடி டிஜி சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், "முதல்வர் சமோசா சாப்பிடுவதில்லை. நாங்கள் யாருக்கும் நோட்டீஸ் கொடுக்கவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னோம். அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த தகவல் எப்படி கசிந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம்" என்று கூறினார்.
இந்நிலையில், மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளபோது முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசாக்களை பிறர் உண்டதுதான் பெரிய பிரச்சினையா என கேள்வி எழுப்பியுள்ள பாஜகவினர், அவரது பேனருக்கு சமோசாக்களை ஊட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago