அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிதியை ரத்து செய்க: மத்திய அரசுக்கு பாஜக எம்.பி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தின் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் அதிருப்தியடைந்த அலிகர் தொகுதி பாஜக எம்பியான சதீஷ் கவுதம், இப்பல்கலைக்கான அனைத்து நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் 150 வருடங்கள் பழமையானதாக உத்தரப் பிரதேசத்தில் இருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். மத்திய பல்கலைக்கழகமான இது டெல்லிக்கு அருகிலுள்ள அலிகர் நகரில் அமைந்துள்ளது. சர் சையது அகமது கான் என்பவரால் 1875 இல் துவக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், பல்கலைக்கழகமாகி மத்திய அரசின் சிறுபான்மை அந்தஸ்து பெற்றிருந்தது. இந்த அந்தஸ்தின் மீது கடந்த 1967 இல் உச்ச நீதிமன்றம் மற்றும் 2006 இல் உபியில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினால் 1967 இல் உச்ச நீதிமன்றமும், 2006 இல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகள் ரத்தாகி உள்ளன. இனி உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை விசாரித்து முடிவு செய்யும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான விதிமுறைகளையும் ஏழு நீதிபதிகள் அமர்வு வெளியிட்டுள்ளது. இதை ஏற்கெனவே அலிகர் பல்கலை பின்பற்றி வருவதாகவும், அதற்கு சிறுபான்மை அந்தஸ்து கிடைக்கும் சூழலும் உருவாகி வருவதாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகளின் இந்த தீர்ப்பினால், அலிகர் மக்களவை தொகுதியின் பாஜக எம்பி சதீஷ் கவுதம் அதிருப்தி அடைந்துள்ளார்.

அலிகர் பல்கலைக்கு மத்திய அரசு அளித்து வரும் அனைத்து நிதிகளையும் உடனடியாக ரத்து செய்யவும் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவின் எம்பியாக தொடருபவர் சதீஷ் கவுதம் கூறுகையில், ‘ஏழு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அளிக்கும் அனைத்துவகை நிதியையும் ரத்து செய்யக் கூறி கடிதம் எழுத உள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

பாஜகவின் சதீஷ் சவுதம், எம்பியானது முதல் அலிகர் பல்கலை., குறித்த சர்ச்சைக்குரியக் கருத்துக்களை கூறி வருகிறார். இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை கட்டிடத்தின் உள்ளே இருக்கும் பாகிஸ்தானின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவின் உருவப் படத்தை அகற்றும்படி வலியுறுத்தி வந்தார். இதை எதிர்த்து அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இதனால் உருவானப் பதற்றம் காரணமாக ஐந்து நாட்களுக்காக அலிகர் நகர் முழுவதிலும் அதன் மாவட்ட நிர்வாகத்தால், இணையதள சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்பிரச்சினையை அப்பல்கலை நிர்வாகம், ஜினாவின் படம் நாட்டின் பிரிவினைக்கு முன்பாக வைக்கப்பட்டது எனவும், இதனால் அதை தம்மால் அகற்ற முடியாது எனப் பதிலளித்து பிரச்சினையை முடித்து வைத்தது.

பிறகு இப்பல்கலையின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் இந்து நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த நிலை, மாணவர்கள் அனுமதியிலும் தொடர்வதாகவும் பாஜக எம்பி சதீஷ் குறை கூறி வந்தார். ஆனால், பாஜக எம்பியின் புகார்கள் அனைத்திற்கும் ஆதாரம் இல்லை எனக் கூறி மவுனம் சாதித்தது. பிறகு இருமுறை எம்பி சதீஷ், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

இப்பதவி நாடாளுமன்ற இருஅவைகளின் எம்பிக்கள் எனும் அந்தஸ்தில் அமர்த்தப்படுகிறது. இதையடுத்து எம்பி சதீஷ், சிறுபான்மை அந்தஸ்தின் மீதான தீர்ப்பையும் தற்போது விமர்சித்துள்ளார். உபியில் சுமார் 25 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். அலிகரின் மக்கள் தொகையில் சரிநிகராகவும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது மதநல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இந்நகரில் ஏற்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்