அலிகர் முஸ்லிம் பல்கலை.,யின் சிறுபான்மை அந்தஸ்து நிலை என்ன? - 18 வருடங்களுக்கு பின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தின் உச்ச நீதிமன்ற வழக்கில் முந்தைய இருமுக்கிய உத்தரவுகள் ரத்தாகி விட்டன. 18 வருடங்கள் விசாரணைக்கு பின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

டெல்லிக்கு அருகில் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்துள்ளது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். கடந்த 1951 முதல் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பெற்று வந்தது. இதன் மீது சில விளக்கங்கள் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் 1967 இல் அஜீஸ் பாஷா என்பவர் வழக்கு தொடுத்தார்.

மத்திய அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இதில், மத்திய அரசின் சட்டம் இயற்றி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை அளிக்க முடியாது எனவும் அதில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சமஉரிமை இருப்பதாகவும் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, வட மாநில முஸ்லிம்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை அளிக்க வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று பிரதமராக வந்த இந்திரா காந்தி 1981-இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நிறுவனமாக அங்கீகரித்ததுடன் அதற்கு சிறுபான்மை அந்தஸ்தையும் அளித்தார். இதற்காக நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் சட்டமும் நிறைவேற்றினார்.

அப்போது முதல் மீண்டும் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு இப்பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தது. இச்சூழலில், இதன் வளாகத்திலுள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் முதுநிலை கல்விக்கானச் சேர்க்கையில் முஸ்லிம்களின் ஒதுக்கீட்டால், சில இந்து மாணவர்கள் 2005 இல் வாய்ப்பை இழந்தனர். அந்த மாணவர்கள் உபியின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தின் மீது கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கில் அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து 2006 இல் தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்ற அமர்வின் முன் பல்கலையின் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்தது.

அமர்வினாலும், பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தின் ரத்தை உறுதி செய்து தீர்ப்பானது. பிறகு இவ்வழக்கின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் பல்கலை நிர்வாகம் உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்பினர் செய்திருந்தனர். பல வருடங்களாக தொடர்ந்த இந்த வழக்கு அதன் மூன்று நீதிபதிகளால், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அப்போது முதல் நடைபெற்ற விசாரணையின் தீர்ப்பு 18 வருடங்களுக்கு பின் நேற்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பை அளித்தவர்களில் நான்கு நீதிபதிகள் 1967 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம், உபியின் அலகாபாத் 2006 இல் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்து அளித்த உத்தரவும் அமலாகிறது.

இது குறித்து ஏழு நீதிபதிகளின் பெரும்பான்மை தீர்ப்பில் கூறியிருப்பதன் சாரம்சம் பின்வருமாறு: ஒரு கல்வி நிறுவனத்தின் அம்சங்களை கருதி அதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. இதுபோல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 30 இன்படி ஒரு கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை அளிக்க முடியும்.

அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, சட்டத்தில் அடிப்படையில் அளிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக கல்வி நிறுவனம் தனது சிறுபான்மை அந்தஸ்தை இழக்காது. ஆனால், அதற்காக விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிப்பதற்கான அம்சங்கள் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யலாம்.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இத்துடன், சிறுபான்மை அந்தஸ்து பெற ஒரு கல்வி நிறுவனத்துக்கு தேவையான அம்சங்களையும் ஏழு நீதிபதிகள் அமர்வே பட்டியலிட்டுள்ளது. இந்த தீர்ப்பு நாளில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியான சந்திர சூட் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இதன் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நிர்ணயிக்கும் அமர்வை தேர்வு செய்து அறிவிப்பார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஷாதான் ஃபராஸத் கூறும்போது, ‘இன்று வெளியான தீர்ப்பின் மூலம், 1967 இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அதன் ஏழு நீதிபதிகள் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, 1981 இல் அலிகர் பல்கலைக்கு மீண்டும் அளிக்கப்பட்ட சிறுபான்மை அந்தஸ்தும் அமலாகாது.

இனி, உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் புதிய அமர்வு சிறுபான்மை அந்தஸ்திற்கானதாக ஏழு நீதிபதிகள் பட்டியலிட்டவற்றை அலிகர் பல்கலை பின்பற்றியுள்ளதா? என விசாரித்து அதற்கான சிறுபான்மை அந்தஸ்தை முடிவு செய்யும்.’ எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் விசாரணைகள் முடிந்து கடந்த பிப்ரவரி 1 இல் அதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பில் பெரும்பான்மையானக் கருத்தை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இதே தீர்ப்பில், இதற்கான மாற்றுக் கருத்தை நீதிபதிகள் சூரியகாந்த், தீபாங்கர் தத்தா மற்றும் சத்தீஷ் சந்திர சர்மா வழங்கியுள்ளனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சார்பாக, மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல், ராஜீவ் தவான், சல்மான் குர்ஷீத் உள்ளிட்டோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா உள்ளிட்டோர் வாதிட்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சியில் 1857 மீரட் கலவரத்தை அடுத்த அடக்குமுறையில் வட மாநில முஸ்லிம்கள் அதிகமாகக் கொல்லப்பட்டனர். இதன் தாக்கமாக ஆங்கிலேயரின் உயர் அதிகாரியாக இருந்த சர் சையது அகமது கான், முஸ்லிம்கள் ஆங்கிலம் மற்றும் அறிவியல் கல்வி பயின்றால்தான் உயர முடியும் எனக் கருதினார்.

இதற்காக, அக்காலத்தின் முஸ்லிம் மவுலானாக்கள், சர் சையது அகமது கான் முஸ்லிம் அல்லாதவர் என ஃபத்வாவும் (ஷரீயத் சட்ட விளக்கம்) அளித்தனர். இதை பொருட்படுத்தாத சர் சையது, இக்கல்வியை அளிக்க அவர் உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி எனும் பெயரில்1875 இல் ஒரு கல்வி நிறுவனத்தை துவக்கினார்.

இச்சூழல் மாறி முஸ்லிம் மவுலானாக்கள் சர் சையது அகமது கானின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை போற்றி வருகின்றனர். இந்துக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான இக்கல்வி நிறுவனத்தில் முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை அதிகமாகப் பயில்கின்றனர். வட மாநில அரசியலில் இப்பல்கலைக்கழகத்தினரின் முடிவுகள் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது.

கடந்த மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகமான குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து நாட்டிலேயே முதலாவதாக அலிகர் பல்கலையில் போராட்டம் துவங்கியது. சுமார் 44,000 மாணவர்கள், 5,000 அலுவலர்கள் மற்றும், 2,000 பேராசிரியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இதன் வளாகத்தில் நடைபெறும் விழாக்களில் பாஜகவின் ஆட்சியாளர்களை அனுமதிக்க, பல்கலை மாணவர்களால் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்