மும்பை: சக்கரமும் பிரேக்கும் இல்லாத வாகனத்தைப் போன்றது மகா விகாஸ் அகாதி கூட்டணி என விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாகனத்தின் இருக்கையில் அமரக்கூட அவர்களுக்குள் சண்டை நடப்பதாகக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு துலேயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “மகாராஷ்டிராவிடம் நான் எதை கேட்டபோதும், மகாராஷ்டிர மக்கள் எனக்கு தாராளமாக தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். 2014 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த துலே நகருக்கு வந்து, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்தேன். மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகால அரசியல் சுழற்சியை முறியடித்து பாஜகவை வரலாறு காணாத வெற்றிக்கு அழைத்துச் சென்றீர்கள்.
இன்று நான் மீண்டும் இங்கு துலே வந்துள்ளேன். மகாராஷ்டிராவில் துலேயில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். இந்த கூட்டம், இந்த உற்சாகம் உண்மையில் அதிக நம்பிக்கையை அளிக்கிறது. பாஜக அங்கம் வகிக்குமு் மஹாயுதி கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உங்கள் ஆசிர்வாதம் தேவை. கடந்த 2.5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் வளர்ச்சி அடைந்துள்ள வேகத்தை நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். மகாராஷ்டிராவுக்குத் தேவையான நல்லாட்சியை மகாயுதி அரசால் மட்டுமே வழங்க முடியும்.
மற்றொரு புறம் மகா விகாஸ் அகாதி கூட்டணி உள்ளது. அந்த வாகனத்தில் சக்கரங்களும் இல்லை, பிரேக்குகளும் இல்லை. ஓட்டுநர் இருக்கையில் உட்காரக்கூட சண்டை. அரசியலுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று இலக்கு இருக்கும். எங்களைப் போன்றவர்கள் பொதுமக்களை கடவுளின் வடிவமாகக் கருதி பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள்.
அதே சமயம் சிலரது அரசியலின் அடிப்படையே 'மக்களை கொள்ளையடிப்பது' தான். மக்களை கொள்ளையடிக்கும் எண்ணம் கொண்ட மகா விகாஸ் அகாதி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்ததும், வளர்ச்சியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு திட்டத்திலும் ஊழலில் ஈடுபடுகிறார்கள். மகா விகாஸ் அகாதி கூட்டணியின் 2.5 வருட மோசடி அரசாங்கத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவர்கள் முதலில் அரசைக் கொள்ளையடித்துவிட்டு, பிறகு மகாராஷ்டிர மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2.5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, தனது பெருமையையும் வளர்ச்சியின் நம்பிக்கையையும் மீட்டெடுத்துள்ளது. வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் வளர்ந்த இந்தியாவிற்கு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கையை எளிதாக்குவது மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது மிகவும் முக்கியம்.
பெண்கள் முன்னேறினால், ஒட்டுமொத்த சமூகமும் வேகமாக முன்னேறும். எனவே, கடந்த 10 ஆண்டுகளில் பெண்களை மையமாக வைத்து மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க எங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை காங்கிரசாலும், அதன் கூட்டணியாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ. 1,500, ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர், ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி மாணவிகளுக்கான உயர்கல்விக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வழங்கும் மஜ்ஹி லட்கி பஹின் திட்டம் (Majhi Ladki Bahin Yojana) பற்றி எவ்வளவு விவாதம் நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்த திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் சதி செய்கிறது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை முதலில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். எனவே, மகாராஷ்டிராவின் ஒவ்வொரு பெண்ணும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண் சக்தி வலுப்பெறுவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.
மராத்தி மொழிக்கு நமது அரசு உயர் அந்தஸ்தை வழங்கியதில் பெருமை கொள்கிறேன். மராத்தி உயர்தர மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். மகாராஷ்டிராவிலும் மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஒரே நேரத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால், மராத்தி ஒரு உயர்தர மொழி அந்தஸ்தைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் உணரவில்லை. மராத்தி மொழிக்கு மரியாதை வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எப்போதும் புறக்கணித்தே வந்துள்ளனர். மகாராஷ்டிரா என்ற பெயரில் அரசியல் செய்யும் இவர்களின் உண்மை முகம் இதுதான்.
பாஜக எப்போதும் 'அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீர்மானத்தில் நமது பழங்குடி சமூகமும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டின் சுதந்திரம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய சமுதாயம் இது.
ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பழங்குடியினரின் பெருமை மற்றும் பழங்குடியினரின் சுயமரியாதைக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு வந்தபோது, பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக இந்த சமுதாயத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் முக்கியத்துவம் பெற்றன. பிர்சா முண்டா பிறந்த நாளை நமது அரசாங்கம் 'பழங்குடியினரின் பெருமை தினமாக' கொண்டாடத் தொடங்கியுள்ளது. பழங்குடி பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.
ஒரு சாதியை இன்னொரு சாதியை எதிர்த்துப் போராட வைக்கும் ஆபத்தான ஆட்டத்தை காங்கிரஸ் ஆடுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னேறுவதை காங்கிரஸால் ஏற்க முடியாது என்பதால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு.
சுதந்திரத்தின் போது, காங்கிரஸின் காலத்தில், பாபா சாகேப் அம்பேத்கர், சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்பதில் நேரு உறுதியாக இருந்தார். மிகுந்த சிரமத்துடன் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அம்பேத்கர் இடஒதுக்கீடு வழங்கினார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வந்த பிறகும் காங்கிரசின் சிந்தனை மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. ராஜீவ் காந்தியும் ஓபிசி இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தார். SC, ST மற்றும் OBC சமூகங்கள் அதிகாரம் பெற்றால், அவர்களின் அரசியல் கடையின் ஷட்டர் இழுத்து மூடப்படும் என்பது அவர்களுக்கு தெரியும்.
ராஜீவ் காந்திக்குப் பிறகு, இப்போது இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை பட்டத்து இளவரசரும் அதே ஆபத்தான மனப்பான்மையுடன் செயல்படுகிறார். எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் ஒற்றுமையை உடைப்பதும், ஓபிசி சமுதாயத்தின் ஒற்றுமையை சிதைப்பதும்தான் காங்கிரஸின் ஒரே நோக்கம்.
எஸ்சி சமூகம் பல்வேறு சாதிகளாக சிதறி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இதனால் எஸ்சி சமூகத்தின் கூட்டு சக்தி பலவீனமடைகிறது. ஓபிசி மற்றும் எஸ்டி சமூகங்களை பல்வேறு சாதிகளாக பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் - உங்களிடம் ஒற்றுமை இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நாம் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸின் ஆபத்தான விளையாட்டை முறியடித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். காங்கிரஸின் தேச விரோத உணர்வுதான் அதன் வேரில் உள்ளது. நாட்டை உடைக்கும் சதிகளில் காங்கிரஸ் எப்போதும் அங்கம் வகிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago