எங்கள் இந்துத்துவா ஜோதிராவ் பூலே-ஷாகு-அம்பேத்கர் சித்தாந்தத்துக்கு முரணானது அல்ல: ஏக்நாத் ஷிண்டே

By செய்திப்பிரிவு

மும்பை: நாங்கள் பின்பற்றும் இந்துத்துவா ஜோதிராவ் பூலே, ஷாகு, அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தத்துக்கு முரணானது அல்ல என்று மகாராஷ்டிர முதல்வரும் சிவ சேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி:

இந்த முறை மகாராஷ்டிரா தேர்தலில் எந்தப் பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்தும்?

வளர்ச்சிதான் இந்தத் தேர்தலின் மிக முக்கியமான அம்சமாக இருக்கும். மாநிலத்துக்காக நாங்கள் கொண்டு வந்துள்ள பல வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசுவோம். இந்துத்துவாவும் ஒரு திட்டம்தான். ஆனால் எங்கள் இந்துத்துவா பரந்த மனப்பான்மை கொண்டது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளான மகா விகாஸ் அகாதிக்கு எதிரானது இந்த தேர்தல். பரவலான வளர்ச்சியை நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மாநிலத்தை மாற்றியமைப்பதாக உள்ளன. இணைப்பு, உள்கட்டமைப்பு இவைதான் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கும். அதை வரும் சில நாட்களில் வெளியிடுவோம். மகாராஷ்டிராவின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்குள் சென்றடையக்கூடிய வகையில் விமானம், ரயில், நீர் மற்றும் சாலை மூலம் மாநிலத்தை இணைப்போம்.

ராகுல் காந்தி சமீபத்தில் மகாராஷ்டிராவுக்கு வந்து 5 உத்தரவாதங்களை அறிவித்தார். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50% வரம்பு நீக்கம், வேலையில்லாதவர்களுக்கு நிதியுதவி, பெண்களுக்கு நிதியுதவி என வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர்கள் புதிதாக வழங்குவதற்கு எதுவும் இல்லை. ஒருபுறம், எங்களின் ‘முதல்வர் மஜி லட்கி பஹின்’ திட்டத்துக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். எங்கள் அன்பு சகோதரிகளுக்கு கொடுக்கும் பணத்தை லஞ்சம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மறுபுறம், அதன் தாக்கம் குறித்து மிகவும் பயந்து, தவறான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

ராகுல் காந்தியின் உத்தரவாதங்கள் எங்கள் மீதான பயத்தைத் தவிர வேறில்லை. நம் நாட்டில் பெண்கள் தியாகத்தின் அடையாளம். நீங்கள் அவர்களை அவமதிக்க முடியாது. நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகிறோம் என்று காங்கிரஸ் முன்பு கூறியது. ஆனால் நாங்கள் அறிவித்த திட்டத்தை செயல்படுத்தினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நேரடி பணப்பரிமாற்றத்தை ₹2,100 ஆக உயர்த்துவோம் என ஏற்கெனவே அறிவித்துள்ளோம்.

மற்ற விஷயங்களைப் பொறுத்தவரை, சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கவில்லை. மராட்டியர்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு ஏற்கனவே 50%க்கு மேல் உள்ளது.

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டதையடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்படும் என்று ​​உத்தவ் தாக்கரே தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு மரியாதைக்குரிய தெய்வம். குறுகிய அரசியல் லாபங்களுக்காக அவரைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதைத்தான் இப்போது உத்தவ் தாக்கரே செய்து வருகிறார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகாராஷ்டிர அரசியலின் மிக முக்கிய நபராக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள். ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணியில் உங்கள் நிலையை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகு உங்கள் கட்சிக்கான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

இதுவரை மரியாதையாகவே அனைத்தும் நடந்தன. எதிர்காலத்திலும் மரியாதையுடன் செயல்கள் நடக்கும். அணுகல், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய மூன்று கொள்கைகளை நான் பின்பற்றுகிறேன். நான் முதல்வர் என்று சொல்கிறேன். CM என்றால் Common Man. சிவ சேனா (UBT) உடன் ஒப்பிடுகையில் நாங்கள் எங்கள் கட்சி கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளோம். எங்கள் வாக்கு விகிதத்தை மேம்படுத்தியுள்ளோம். எனது பணியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா இருவரும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் சிவசேனாவை நம்புகிறார்கள். தைரியமான, நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் தலைவராக அவர்கள் என்னை நம்புகிறார்கள். எனது நிலையை அதிகரிக்க மட்டுமே நான் கடுமையாக உழைத்தேன். எனது அரசியல் பயணத்தில் நான் யாருக்கும் எதிராக செயல்படவில்லை. நான் என் வேலையில் கவனம் செலுத்தி, என் வேலை எனக்காக பேச அனுமதித்தேன்.

மகாராஷ்டிராவில் இது ஒரு முன்னோடியில்லாத தேர்தலாக உள்ளது. இங்கு இரு பிராந்திய சக்திகளான சிவசேனா மற்றும் என்சிபி பிளவுபட்டு, மாநிலத் தேர்தலில் முதன்முறையாக ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிடுகின்றன. இந்த பலமுனைச் சண்டையில் வாக்காளர்கள் குழப்பமடைவார்களா?

வெற்றி தோல்விகள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் குழப்பம் இருக்காது. நாங்கள் எங்கள் வேலையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மக்களும் பார்த்திருக்கிறார்கள். உண்மையான சிவ சேனா எது என்பதை மக்களவை தேர்தலில் நிரூபித்துவிட்டோம். நாங்கள் சிவசேனா UBTயை விட அதிக வாக்குகளை பெற்றோம். வாக்காளர்கள் மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தை மகாயுதி அரசாங்கத்துடன் ஒப்பிட்டாலும், அவர்கள் வித்தியாசத்தைப் பார்ப்பார்கள். மகா விகாஸ் அகாதி ஆட்சியில், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ₹4 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. எனது தலைமையிலான ஆட்சியில் ரூ. 350 கோடி செலவு செய்துள்ளோம். பாசனம் தொடர்பாக 124 முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். மகா விகாஸ் அகாதி அரசாங்கம் நான்கை மட்டுமே எடுத்திருந்தது. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் அவர்கள் ஸ்பீட் பிரேக்கர்களை வைக்கிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு வயதினருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்தத் தேர்தலில் மகாயுதி (பாஜக-சிவ சேனா-தேசியவா காங்கிரஸ் கூட்டணி) எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.

மஹாயுதியில் உள்ள வேறுபாடுகள் மற்றும் நட்பு சண்டைகள் பற்றி...

கூட்டணியில் நவாப் மாலிக் மட்டும் விதிவிலக்கு. மற்றபடி, நட்பு சண்டை இருந்தாலும் கூட நாங்கள் அனைவரும் ஒரு பக்கமாக இருக்கிறோம். மகாயுதி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபடுவோம்.

அஜித் பவார் ஒரு குழப்பமான கூட்டணி பங்காளியா? நீங்கள் இந்துத்துவா மீது சத்தியம் செய்யும்போது அவர் பூலே-ஷாஹு-அம்பேத்கர் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

எங்கள் இந்துத்துவா ஜோதிராவ் பூலே-ஷாகு-அம்பேத்கர் சித்தாந்தத்திற்கு முரணானது அல்ல. எங்களது நலத்திட்டங்கள் அனைவருக்கும் பயனளிக்கும். நாங்கள் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. பாஜகவும் சிவசேனாவும் இயற்கையான கூட்டணிக் கட்சிகள் என்பதும், அஜித் பவார் புதிய கூட்டணிக் கட்சி என்பதும் உண்மைதான். ஆனால், நாங்கள் அனைவரும் இப்போது மகாயுதியாக ஒன்றிணைந்துள்ளோம், இந்தத் தேர்தலில் வெற்றிபெற இந்தக் கூட்டணியை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்