கான்பெர்ரா: கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம் அளித்துள்ளதாக சாடினார்.
நான்கு நாட்கள் (நவ.3 -7) அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள கான்பெர்ரா நகரில் அந்நாட்டு வெளியுறுவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உடன் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நான் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதையும் வழங்காமல் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்கும் முறையை கனடா வளர்த்துக் கொண்டுள்ளது.
இரண்டாவதாக, கனடாவை பார்க்கும்போது, எங்களைப் பொறுத்தவரை எங்கள் நாட்டு தூதர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றாவது சம்பவம், அந்த நபர் பேசியதைப் பற்றியது. அந்த வீடியோவைப் பாருங்கள். தீவிரவாத சக்திகளுக்கு அங்கு (கனடாவில்) அளிக்கப்படும் அரசியல் இடத்தை அது ஓரளவு வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிராம்டன் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங், அந்தச் சம்பவம் இந்தியச் சமூகத்துக்கு அதிருப்தி அளிக்க கூடியது என்றார். அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் விவரிக்கும் காழ்ப்புணர்ச்சி பற்றி எங்கள் நாட்டு உறுப்பினர்கள் வலுவான கருத்துகளை வெளிப்படுத்தினர் என்பதை நான் அறிவேன். குறிப்பாக தீபாவளியுடன் தொடர்புடையது பற்றியது. அது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.
» விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் - ஒரு சார்பான தகவல்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு
நடந்தது என்ன? - கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இந்தத் தாக்குதலின்போது அப்பகுதி வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது. இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “கனடாவில் இந்து கோயில் மீதும், இந்துக்கள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தசம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், கனடாவில் நடக்கும் செயல்களுக்கு இந்தியத்தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்கில் நடந்து கொள்ளும் கோழைத்தனமான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகத்தையும் நான் கண்டிக்கிறேன். இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா நாட்டுஅரசு, நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் கடமையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப் பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்திய அரசு வெளியேற்றியது. இந்தியா, கனடா நாடுகளின் உறவுகள் மோசமாகி வரும் நிலையில் முதல்முறையாக கனடாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், கனடாவில் இந்துக்கள் மீதும் இந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago