அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது: கனடா தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்தியஅரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டாகவே இந்தியா - கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கடந்த மே மாதம் பதில்அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு,அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர, சிலகட்சிகளும் காலிஸ்தான் ஆதரவுதலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் வாக்கு வங்கியைகுறிவைத்தே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது’’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதுகனடா குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத் தகவல்சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் சமீபத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ‘கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கீகாரம் அளித்ததாகவும், அதுகுறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்துள்ளதாகவும் கனடாஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

‘‘வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இந்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா பெயரை குறிப்பிட்டது நான்தான்’’ என்று கனடா வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்தார்.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று இந்தியஅரசு உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கனடாவின் பொது பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவின் முன்பு அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த அக்டோபர் 29-ம் தேதி அபத்தமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கனடாவின் தூதரக அதிகாரியை அழைத்து,இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு மோசமாக நடத்துகிறது.அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அவர்களது பேச்சு ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபோல, தூதரக விதிகளை மீறி கனடா அரசு செயல்படுகிறது.

இத்தகைய நெருக்கடிக்கு இடையில்தான் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, உலகஅரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கனடா பரப்புகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், இருதரப்பு உறவுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்