ராமர் கோயிலில் முதலாண்டு பிரம்மாண்ட தீப உற்சவம்: இரண்டு உலக சாதனை படைத்தது அயோத்தி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் முதலாண்டு பிரம்மாண்ட தீபஉற்சவம் நடைபெற்றது. இதில் 25 லட்சம் அகல் விளக்குகளுடன், 1,121 வேதாச்சாரியார்களின் ஆரத்தி என 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

ராமாயணத்தில் ராமர் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பும் நாளை வடமாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசின் சார்பில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் முதலாண்டு தீப உற்சவம் நடைபெற்றது.

உ.பி.யில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் அயோத்தி மிக அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. கடந்த 2017 முதல் ஒவ்வொரு தீபாவளிக்கும் பல லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டு வந்தது. இந்தமுறை, முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் 7-வது ஆண்டாக அயோத்தியில் 25 லட்சத்து 12,585 அகல் விளக்குகளில் ஒளி ஏற்றப்பட்டது. இது, முதல் உலக சாதனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 22.23 லட்சம் என்றிருந்தது.

இரண்டாவது உலக சாதனையாக சரயு நதிக்கரையின் ஆரத்தியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை 1,121 வேதாச்சாரியார்கள் நடத்தினர். இதுபோல், ஒரே நேரத்தில் இந்தளவு எண்ணிக்கையில் வேதாச்சாரியார்கள் உலகில் எங்குமே கலந்து கொள்ளவில்லை. இந்த சாதனை நிகழ்ச்சிக்காக, துறவிகள், ராம பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள், அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகமும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளின் மாணவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் களம் இறங்கி இருந்தனர். ‘ஜெய் ராம்! ஜெய் ஜெய் ராம்!’ என முழக்கமிட்டபடி ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியின் முதல் தீபத்தை கருவறையில் உள்ள ராமர், சீதை, லஷ்மண் மற்றும் அனுமன் சிலைகளின் முன் முதல்வர் யோகி ஏற்றி வைத்தார். பிறகு கருவறைக்கு முன்பு 5 தீபங்களை அவர் ஏற்றினார்.

சரயு நதிக்கரையில் ஆரத்தி காட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இதையடுத்து ராமர் உள்ளிட்ட அனைத்து கோயில்கள், உள்ளூர்வாசிகளின் வீட்டு வாசல்கள் என அயோத்தி நகர் முழுவதும் தீபங்களால் ஒளிரத் தொடங்கின. அயோத்தியில் எத்தனை விளக்குகள் ஒளி ஏற்றப்பட்டன என்பது டிரோன்கள் மூலம் கணக்கிடப்பட்டன. அடுத்து சரயு நதிக்கரையில் அன்றாடம் நடைபெறும் ஆரத்தி, தீபாவளியை முன்னிட்டு அதிக முக்கியத்துவம் பெற்றது. இங்கும் முதல்வர் யோகி ஆரத்தி செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கணக்கிட்டு பதிவு செய்த பிறகு அதே நாளில் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் முதல்வர் யோகியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடுதலாக சுமார் 10 லட்சம் மின்விளக்குகளாலும் அயோத்தி நகர் அலங்கரிக்கப்பட்டது. ராமர் கோயில் மற்றும் சரயு நதிகரையில் லேசர் ஒளிக்கதிர்களும் கண்கவரும் காட்சிகளாகின. முதல்வர் யோகியுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உ.பி. துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பாதக், ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை தலைவர் சம்பக்ராய் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விஷ்வ இந்து பரிஷத் தலைமையகமான கர் சேவக்புரத்தில் ராமாயணம் கண்காட்சியை முதல்வர் யோகி தொடங்கி வைத்தார். அப்போது ராமர் - சீதை திருமணக் காட்சி படத்தை வெளியிட்டார். பிறகு அரங்கில் கூடியிருந்த துறவிகள், மடாதிபதிகள் முன்பாக முதல்வர் யோகி உரையாற்றினார். அப்போது, 2047-ல் அயோத்தியை போலவே காசி எனும் வாராணசியையும் மதுராவையும் மாற்றுவது தனது குறிக்கோள் என்று தெரிவித்தார்.

முதல்வர் யோகி மேலும் பேசுகையில், ‘‘உலகில் சிறந்ததாக இருப்பது சனாதனம். வாழவும், வாழ விடவும் செய்யும் இது அனைவரின் நலத்திற்கானது. இதை விமர்சிப்பவர்கள் தங்கள் அழிவை தானே தேடுபவர்கள். ராவணன் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் நம் நாட்டின் வலிமையை குலைக்க முயல்கின்றனர். இதை சாதி, மொழி, குடும்பங்கள் உள்ளிட்ட பல வகைகளால் நம் தேச ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுகிறது’’ என்று தெரிவித்தார். வட மாநிலங்களில் தீபாவளி மொத்தம் 5 நாட்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்