உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம்: ஓய்வூதியம் கேட்டு டெல்லி சென்ற ராஜஸ்தான் பெண்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உயிரோடிருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணங்களில் உள்ள நிலையில் தங்களுக்கு பென்ஷனும், நீதியும் கேட்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் டெல்லி வந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சதரன் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்கு தேவி (69). கணவரை இழந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு வரை, முதியோர் பென்ஷனைப் பெற்று வந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பென்ஷன் வரவில்லை. இதுதொடர்பாக தனது கிராம நிர்வாக அதிகாரியைக் கேட்டபோது, இவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் உள்ளதென்றும், அதனால்தான் பென்ஷன் நிறுத்தப்பட்டது என்றும் தெரியவந்தது.

தான் உயிருடன் இருக்கும் நிலையில் இறந்ததாக ஆவணம் பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் கடந்த 21 மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார் ஜம்கு தேவி.

இந்நிலையில் இவர் உரிய நீதி கேட்டும், பென்ஷன் வழங்கக் கோரியும் அவர் டெல்லியில் நடைபெற்ற பென்ஷன் குறைதீர்ப்பு தொடர்பான கூட்டத்துக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கணவர் இறந்த பின்னர், என்னிடம் உள்ள ஆடுகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். திடீரென முதியோர் பென்ஷனை நிறுத்தியதால் கடும் அவதிக்குள்ளானேன். அதிகாரிகளை கேட்டால் இழுத்தடிக்கிறார்கள். அதனால்தான் எனது புகாரை பதிவு செய்ய டெல்லி வந்தேன்" என்றார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் இதுபோன்ற தவறான ஆவணப் பதிவால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் இறந்ததாக பதிவு செய்யப்பட்டதால் அவர்களுக்கு வந்து கொண்டிருந்த முதியோர் பென்ஷன் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதேபோல் ஆஜ்மீரைச் சேர்ந்த காஞ்சன் தேவி கூறும்போது, “நான் எனது கணவரை இழந்துவிட்டேன். 30 மாதங்களுக்கு முன்பு எனது விதவை பென்ஷன் நிறுத்தப்பட்டு விட்டது. நான் இறந்ததாக கிராமத்தில் உள்ள ஆவணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் கேட்டால், புதிதாக பென்ஷன் கணக்கு தொடங்குமாறு கூறுகின்றனர். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன்" என்றார்.

பீவார் மாவட்டம் மொஹல்லா நரசிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்த குடியா (22) கூறும்போது, “நான் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த 2023 ஜனவரி வரை எனக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன் கிடைத்து வந்தது. ஆனால் ஜனவரி மாதம் திடீரென பென்ஷன் நிறுத்தப்பட்டு விட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவணத்தில் எனது முகவரி மாற்றப்பட்டு விட்டதாகவும், நான் வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் ஆவணங்களில் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால், நான் ராஜஸ்தானில்தான் இருக்கிறேன். பென்ஷன் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறேன். இதேபோல் எனது ஆதார் அட்டை தகவலிலும் பிரச்சினை உள்ளது. இதனால் எனது ஆதார் எண் கடந்த ஜூன் மாதம் செயலிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது" என்றார்.

பீவார் மாவட்டம் பியாகேடா பகுதியைச் சேர்ந்த கெலி தேவி கூறும்போது, “எனக்கும் பென்ஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. எனது பென்ஷன் ஆணை நகலை, மற்றொரு பெண்ணின் வங்கிக் கணக்குடன், இ-மித்ரா மைய (அரசு சேவை மையம்) ஊழியர் தவறுதலாக இணைத்துவிட்டார்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள பெண் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார். இதனால் எனக்கு பென்ஷன் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு நிர்வாகப் பிரச்சினைகள், அதிகாரிகள் செய்யும் தவறுகள், தொழில்நுட்பத் தவறுகளால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்றார்.

இவர்கள் டெல்லியில் நடைபெற்ற பென்ஷன் குறைதீர்ப்புத் தொடர்பான கூட்டத்தில் தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியிலுள்ள பென்ஷன் பரிஷத், மஸ்தூர் கிஸான் சக்தி சங்கடன் (எம்கேஎஸ்எஸ்) அமைப்புகள் நடத்தின. ராஜஸ்தான் மாநிலத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பென்ஷன் பரிஷத் மற்றும் எம்கேஎஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நிகில் தே கூறும்போது, “மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்பத் தவறுகள் ஏற்படுகின்றன. ராஜஸ்தானில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 13 லட்சம் பேருக்கு பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படவேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பென்ஷன் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். தவறுதலாக நீக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக அவர்களை பென்ஷன் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்