வடோதரா: ராணுவ விமானம் தயாரிப்பதற்கான டாடா - ஏர்பஸ் தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இணைந்து பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ‘‘இந்த நாட்டின் சிறந்த மகன் ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ந்திருப்பார்’’ என்று மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விமான உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் உள்ள அவ்ரோ-748 ரக போக்குவரத்து விமானங்கள் பழமையாகிவிட்டன. இதையடுத்து, ரூ.21 ஆயிரம் கோடியில் சி-295 ரகத்தை சேர்ந்த 56 ராணுவ விமானங்களை வாங்க ஏர்பஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலையில் 4 ஆண்டுகளில் 16 விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். 40 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
2022-ம் ஆண்டு அடிக்கல்: இந்தியாவில் இந்த விமானங்களை தயாரிக்கும் பணி, டாடா குழுமத்தை சேர்ந்த டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான தொழிற்சாலையை குஜராத்தின் வடோதராவில் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி கடந்த 2022 அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார். நாட்டின் முதல் தனியார் ராணுவ தொழிற்சாலையான இதன் கட்டுமான பணி சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இணைந்து, வடோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ராணுவ விமான தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: எனது நண்பரான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். சி-295 ரக ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நாங்கள் இருவரும் இணைந்து திறந்து வைத்துள்ளோம். இது இந்தியா - ஸ்பெயின் உறவை பலப்படுத்துவதுடன், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதாக இருக்கும். வருங்காலத்தில் இங்கு தயாரிக்கப்படும் ராணுவ விமானங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
புதிய இந்தியாவின் புதிய பணி கலாச்சாரத்தை இந்த தொழிற்சாலை பிரதிபலிக்கிறது. இந்த நாட்டின் சிறந்த மகனான ரத்தன் டாடா சமீபத்தில் காலமானார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விமான உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசும்போது, “வரும் 2026-ம் ஆண்டில் முதல் விமானம் தயாராகிவிடும்” என்று தெரிவித்தார். பின்னர், வடோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் பார்வையிட்டனர். அங்கு மதிய விருந்துடன் இரு தலைவர்கள் தலைமையில் இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், உள்கட்டமைப்பு, ரயில் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரூ.4,800 கோடி திட்டங்கள் தொடக்கம்: அங்கிருந்து அம்ரேலிக்கு சென்ற பிரதமர் மோடி, பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago