‘சட்டவிரோத சிறைவைப்பு புகார்’ - ஈஷாவுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில், யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், தாங்களாகவே விருப்பப்பட்டு தங்கியிருப்பதாக இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை இந்த வழக்கை முடித்து வைக்கும் போது, ஆட்கொணர்வு மனு மீது காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தினை கடிந்துகொண்டது. அப்போது, இந்த நடைமுறைகள் பொதுமக்களையும், நிறுவனங்களையும் கலங்கப்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று தெரிவித்தது.

முன்னதாக, கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் அங்கயே தங்கி விட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து, அக். 4-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு அவசர வழக்காக அக். 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (அக்.18) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “அந்தப் பெண்கள் தங்களின் 24 மற்றும் 27 வயதில் தாங்களாகவே முன்வந்து ஆஸ்ரமத்தில் இணைந்தனர். அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும் அவர்கள் 10 கி.மீ., மாராத்தான் போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். தங்களின் பெற்றோர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள்.” என்றார்.

இதனிடையே, சம்மந்தப்பட்ட பெண்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாடிய பின்பு தலைமை நீதிபதி கூறுகையில், “நாங்கள் அந்தப் பெண்களிடம் தனித்தனியாக பேசினோம். அவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அறக்கட்டளையில் தங்கி உள்ளனர் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பம் நிரூபிக்கப்பட்ட பின்பு, ஆட்கொணர்வு மனு மீது மேலதிக உத்தரவுகள் தேவையில்லை.” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்