‘வனம், வனவிலங்குகளை காக்கும் பிஷ்னோய் சமூகம்’ - சல்மான்கான் மீதான மான் வேட்டை வழக்கின் பின்னணி

By ஆர்.ஷபிமுன்னா

ஜோத்பூர்: மரங்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பை தங்களின் தார்மிகக் கடமையாக கொண்டு வணங்கும் ஒரு வித்தியாசமான சமூகம் பிஷ்னோய். இந்தச் சமூகத்தினர், ‘மனித உயிர்கள் மட்டும் அல்ல. வனவிலங்கு மற்றும் தாவரங்களுடனும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற முக்கியமான கொள்கையை கொண்டவர்கள். இந்த சமூகம்தான், சிங்காரா வகை மான் வேட்டையாடி சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்தது.

சுமார் 540 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் தோன்றிய பிஷ்னோய் சமூகம் சுத்தம், அன்பு, அகிம்சை, விலங்களுடன் நேசம், மரங்களுடன் பாசம் என மொத்தம் 29 நல்வழிகளை தார்மிகக் கடமையாக கொண்டு உருவானது. ‘பிஷ்‘ என்றால் இருபது ‘னோய்‘ என்றால் ஒன்பது என்பது அர்த்தமாகும். எனவே 29 நல்வழிகளை குறிக்கும் இந்த சமூகத்திற்கு பிஷ்னோய் எனும் பெயர் வந்தது.

முஸ்லிம்களால் 786 எனும் எண் புனிதமாகக் கருதப்படுவது போல், பிஷ்னோய்கள் 29-ஐ மிகவும் புனிதமாகக் மதிப்பது உண்டு. இந்த சமூகத்தை 1485-ஆம் ஆண்டில் உருவாக்கிய குரு ஜம்பேஷ்வர் பிஷ்னோய் என்பவர் இச்சமூகத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இன்றும் பிஷ்னோய் சமூகம் ராஜஸ்தானில் அதிகம் வசிக்கிறது.

ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் மாவட்டமான ஜோத்பூரில் பிஷ்னோய் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். ஜோத்பூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் சல்மான்கான் வேட்டையாடியதாகக் கூறப்படும் சிங்காரா மான்களின் கங்காணி காடு உள்ளது. பெரும்பாலும் பொட்டல் காடான இங்கு ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் வயல்வெளியை பார்க்கலாம். இதில் பல இடங்களில் சிங்காரா உள்ளிட்ட பல்வேறு வகை மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் உள்ளன. இவற்றில் மிக வேகமாக துள்ளி ஓடும் சிங்காரா மான்கள் எந்த பதட்டம் இன்றி மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். இங்குள்ள வீடுகள் மற்றும் தெரு பகுதிகளில் சிங்காரா மான்கள், பிஷ்னோய் சமூகத்தினரின் வீட்டு விலங்குகளைப் போல் நடமாடிக் கொண்டிருக்கும்.

இவர்களில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் இடையே ஒரு அதிசயமான வழக்கம் உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணையாக சிங்காரா மான்குட்டிகளுக்கு சாதாரணமாக தாய்பால் ஊட்டுவதை காணலாம். பிஷ்னோய் சமூகம் துவங்கிய காலத்தில் இருந்து மான்குட்டிக்கு தாய்பால் தரும் வழக்கம், அச்சமூகத்துப் பெண்களிடம் உண்டு.

படம்: அஸ்வின் வியாஸ்

மான்களுக்கு தாய்பால் ஊட்டும் பெண்கள்: ஒரு தாய்மான் பல காரணங்களால் இறந்து விடும் போது, அதற்கு வேறு மான்கள் பாலூட்ட முன்வருவதில்லை. அதேசமயம், தாயை இழந்த குட்டியும், வேறு மானிடம் பாலை குடிப்பதில்லை. இந்த வித்தியாசமான சூழலில், தாயை இழந்த மான் குட்டிகளை வாழ வைக்க பிஷ்னோய் பெண்கள் தம் பிள்ளைகளை போல் அக்குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கிறார்கள்.

சரணாலயம் நடத்தும் பிஷ்னோய்கள்: சுமார் மூன்று மாதம் தாய்பால் அருந்திய பின்பே சிங்காரா மான்கள் புல் சாப்பிடக் கற்றுக் கொள்கின்றன. இதன் பிறகு சிங்காரா மான்குட்டிகள் கங்காணி காட்டின் நடுவில் உள்ள பிஷ்னோய் சமூகத்தினர் புனிதமாகக் கருதும் குரு ஜம்பேஷ்வர் கோயிலில் விடப்படுகின்றன. இதற்காக அக்கோயிலின் நிர்வாகத்தில் ஒரு விலங்குகள் சரணாலமும் உள்ளது. மெல்ல வளர்ந்தபின்பு இங்கிருந்து அவை காட்டில் சென்று வாழ்ந்து கொள்கின்றன.

சிங்காராவிற்காக வயல்வெளி: வீட்டு விலங்குகளை போல் சிங்காரா மான்களும் பிஷ்னோய் சமூக மக்களை எளிதில் அடையாளம் காணும் குணம் கொண்டவை. தம்மை வெளிநபர் யாராவது பகலில் வேட்டையாட வந்தால், இதற்கு வயல்வெளியில் வேலை செய்யும் பிஷ்னோயினரின் அருகில் துள்ளி ஓடி வந்து நின்று கொள்ளும் வழக்கம் கொண்டது. இங்குள்ள பிஷ்னோய்கள் தங்களின் வயல்களில் ஒரு பகுதியை அறுவடை செய்யாமல் சிங்காரா மான்களுக்காக விட்டு வைப்பதும் உண்டு.

படம்: அஸ்வின் வியாஸ்

சல்மான் மீது சிங்காரா வேட்டை புகார்: இங்குள்ள விலங்குகளை வேட்டையாட வருபவர்கள் யாராக இருந்தாலும் பிஷ்னோய்களின் கண்களில் இருந்து தப்புவது கடினம். இந்தவகையில் கடந்த அக்டோபர் 1998-ல் கங்காணி காடுகளின் இந்தி படப்பிடிப்பின் போது சல்மான்கான் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மீது சிங்காரா மான் வேட்டை புகார் கிளம்பியது. மான்வேட்டையை தடுக்க போய், இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட பிஷ்னோய் சமூகத்தினர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.

வன்னி மரம் வெட்ட மன்னன் முடிவு: இதுபோல், விலங்குகள் மற்றும் மரங்களை பாதுகாக்க தம் உயிரையும் இழப்பது பிஷ்னோய்களுக்கு புதிதல்ல. இதற்காக அவர்கள் செய்த தியாகம் இந்திய வரலாற்றில் முக்கிய அங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1731-ல் மார்வாரின் மன்னராக இருந்த அபய்சிங், ஜோத்பூர் கோட்டை கட்டுவதற்காக அருகில் உள்ள கேச்சாட்லி கிராமத்தில் இருந்த வன்னி மரங்களை வெட்ட முடிவு செய்தார்.

அம்ருதா தேவி பிஷ்னோய்: இதற்காக மன்னர் தனது தளபதியான கிரிதாரி தாஸ் ஹக்கீம் என்பவருக்கு உத்தரவிட்டார். மரங்களை வெட்ட ஆட்களுடன் சென்ற தளபதி ஹக்கீமிற்கு பெரும் அதிர்ச்சி. அங்கிருந்த அம்ருதாதேவி பிஷ்னோய் என்ற பெண்ணின் தலைமையில் அக்கம், பக்கம் உள்ள கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்காண பிஷ்னோய் சமூகத்து பெண்கள் தம் மகன் மற்றும் மகள்களுடன் கூடி மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படம்: அஸ்வின் வியாஸ்

363 பேர் பலி: மரங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு அவற்றை வெட்ட விடவில்லை. ஆனால், வன்னி மரங்களை கட்டி அணைத்தபடி நின்று இருந்த 363 பேர்களை வெட்டி விட்டு, மரங்களை அறுத்து சென்றான் அந்த தளபதி. அதன் பிறகு தன் தவறை உணர்ந்த மன்னன் அபய்சிங், அதற்காக பிஷ்னோய் சமூகத்தினரிடம் வருந்தி மன்னிப்பு கேட்டதாக வரலாறு.

மரங்களுக்காக உயிர் தியாகம்: இத்துடன், அப்பகுதியில் உள்ள வனம் மற்றும் விலங்குகளை காக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த அளவிற்கு, மரங்களுக்காக பிஷ்னோய் சமூகத்தினர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்காண பெண்கள் ஜோத்பூரின் அருகில் உள்ள கேச்சாட்லி எனும் கிராமத்தில் கூடி பலியானவர்களை அவர்கள் பெயர்களுடன் நினைவு கூர்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் விருதுகள்: ராஜஸ்தான் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழும் பிஷ்னோய் சமூகத்தினருக்கும் இது ஒரு முக்கியமான திருவிழா. அம்ருதா தேவியின் பெயரில் மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன.

லாரன்ஸ் அறிவிப்பு: இந்தச் சமூகத்தினர் மகராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் கர்நாடகாவிலும் உள்ளனர். இதே சமூகத்தை சேர்ந்த பஞ்சாபியான லாரன்ஸ் பிஷ்னோய்தான் தற்போது, சல்மானை கொல்லப்போவதாக 2018 - ல் வெளிப்படையாக அறிவித்தார். குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸின் கும்பல்தான் சல்மான்கானை குறி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்