புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது: சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்குரிமைகளைச் செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு மாநிலங்களிலும் மறுதேர்தல் என்று எதுவும் நடத்தப்படவில்லை. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு அதிகரிப்பு தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதி. வேட்பு மனுக்கள் அக்டோபர் 30ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப்பெற நவம்பர் 4ம் தேதி கடைசி நாள். நவம்பர் 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது. இம்மாநிலத்தில், 52,000 இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இந்த மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2.6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதில் 11.84 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். ஜார்க்கண்ட்டில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு அக்டோபர் 25ம் தேதியும், இரண்டாம் கட்டத்துக்கு அக்டோபர் 29ம் தேதியும் கடைசி நாளாகும்.
» விமானப் போக்குவரத்து போல் டிஜிட்டல் உலகுக்கும் பொது விதிகள் உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி
» கேரளா: பிரிவு உபசார விழாவுக்கு மறுநாளில் வீட்டில் மாவட்ட துணை ஆட்சியரின் சடலம் மீட்பு
முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்போடர் 30ம் தேதியும் நடைபெறும். முதல்கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 30ம் தேதி கடைசி நாள். இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுககள் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 1. இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வயநாடு மக்களவைத் தொகுதி: வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும். இந்தத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 30ம் தேதி. நவம்பர் 13ம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.
இவை தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 47 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜார்க்கண்ட் முதல்கட்டத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட உள்ளது. அதாவது, இந்த 47 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago