விமானப் போக்குவரத்து போல் டிஜிட்டல் உலகுக்கும் பொது விதிகள் உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகதுக்கும் அதுபோன்ற சர்வதேச விதிகள் மற்றம் ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (WTSA) 2024-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள், 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தொலைத்தொடர்பு அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 120 கோடி மொபைல் போன் பயனர்கள் இருக்கிறார்கள். 95 கோடி இணைய பயனர்கள் இருக்கிறார்கள். உலகின் 40 சதவீதத்துக்கும் அதிகமான நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கின்றன. ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதன் மூலம் உலகம் முழுவதையும் மேம்படுத்துவது பற்றி உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (World Telecommunication Standardization Assembly-WTSA) பேசுகிறது. இணைப்பின் மூலம் முழு உலகையும் மேம்படுத்துவது பற்றி இந்தியா மொபைல் காங்கிரஸ் பேசுகிறது. அதாவது ஒருமித்த கருத்து மற்றும் இணைப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டும் இன்றைய மோதல் நிறைந்த உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்ற அழியாத செய்தியை பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா கடைப்பிடித்து வருகிறது. G20 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ​​ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற செய்தியை நாங்கள் கொடுத்தோம். மோதலில் இருந்து உலகை விடுவித்து இணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

கடந்த 2014ல் இந்தியாவில் இரண்டு மொபைல் உற்பத்தி அலகுகள் மட்டுமே இருந்தன. இன்று 200க்கும் மேற்பட்டவை உள்ளன. முன்பு நாங்கள் பெரும்பாலான போன்களை இறக்குமதி செய்தோம். இன்று நாங்கள் மொபைல் போன் ஏற்றுமதியாளர் நாடாக அறியப்படுகிறோம். முன்பு செய்யப்பட்ட உற்பத்தியைவிட இந்தியா தற்போது 6 மடங்கு அதிகமாக மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறது. இதோடு நாங்கள் நிற்கவில்லை. இப்போது, முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களை உலகிற்கு வழங்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சிப்-புகள் முதல் முழு தயாரிப்பு வரை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, இந்தியாவில் குறைக்கடத்திகளில் நாங்கள் பெரும் முதலீடு செய்கிறோம்.

வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா அமைத்துள்ள ஆப்டிகல் ஃபைபரின் நீளம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மொபைல் காங்கிரஸில் 5G ஐ அறிமுகப்படுத்தினோம். இன்று, ஏறக்குறைய நாட்டின் அனைத்து மாவட்டங்களும் 5G சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நாங்கள் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்.

உலகளாவிய நிர்வாகத்திற்கான முக்கியத்துவத்தை உலகளாவிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று கிடைக்கும் அனைத்து டிஜிட்டல் கருவிகள் மற்றும் பயன்பாடுகள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. எனவே எந்த நாடும் அதன் குடிமக்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தனியாக பாதுகாக்க முடியாது. உலகளாவிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகத்திற்கும் அதுபோன்ற சர்வதேச விதிகள் மற்றம் ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் நேஷனல் சைபர் செக்யூரிட்டி ஸ்ட்ராடஜி ஆகியவை, ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது" என தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் முக்கியத்தவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், 'WTSA என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை முன்னோடிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.

WTSA 2024 ஆனது 6G, AI, IoT, Big Data, சைபர் செக்யூரிட்டி போன்ற அடுத்த தலைமுறை முக்கிய தொழில்நுட்பங்களின் தரநிலைகளைப் பற்றி விவாதிக்கவும் தீர்மானிக்கவும் நாடுகளுக்கு ஒரு தளத்தை இது வழங்கும். இந்த நிகழ்வை, இந்தியாவில் நடத்துவது உலகளாவிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதிலும், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான பாதையை அமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்க நாட்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்கும். இந்திய புத்தொழில்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவுசார் சொத்துரிமை மற்றும் நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை வளர்ப்பதில் முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற உள்ளன.

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024, இந்தியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வெளிப்படுத்தும், அங்கு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் வட்ட பொருளாதாரத்தில் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவார்கள், மேலும் 6G, 5G யூஸ்-கேஸ் ஷோகேஸ், கிளவுட் & எட்ஜ் கம்ப்யூட்டிங், IoT, குறைக்கடத்திகள், சைபர் பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், சாட்காம் மற்றும் மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் கவனத்தை ஈர்ப்பார்கள்.

ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமான இந்தியா மொபைல் காங்கிரஸ், தொழில், அரசு, கல்வியாளர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிற முக்கிய பங்குதாரர்களுக்கான புதுமையான தீர்வுகள், சேவைகள் மற்றும் அதிநவீன பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதற்கான உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட தளமாக மாறியுள்ளது.

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ல் 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சுமார் 900 புத்தொழில்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பு இடம்பெறும். இந்த நிகழ்வு 900-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதையும், 100-க்கும் மேற்பட்ட அமர்வுகளை நடத்துவதையும், 600-க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய பேச்சாளர்களுடன் கலந்துரையாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்