“பாகிஸ்தானுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று நினைக்கிறேன்” - ஃபரூக் அப்துல்லா

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தான் நினைப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்லாமாபாத் செல்ல உள்ள நிலையில், ஃபரூக் அப்துல்லா அதனை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் செல்ல உள்ளது நல்ல விஷயம். வழக்கமாக இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார். ஜெய்சங்கர் செல்வதில் மகிழ்ச்சி. அவருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. எஸ்சிஓ மாநாட்டைத் தாண்டி, வெறுப்பின் மூலமாக அல்லாமல், நட்பின் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, "லெபனான், சிரியா, ஈாரன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் மீது குண்டு போடும் இஸ்ரேலின் நடவடிக்கை தீவிரமானது. நாம் உலகை காக்க வேண்டுமானால் அதற்கு போர் தீர்வல்ல. அப்பாவிகளை போர் கொல்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் மிகப் பெரிய வெற்றியை பெற முடியும். பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் முன்னோக்கிச் செல்லும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் பேட்டி: முன்னதாக, டெல்லியில் இன்று நடைபெற்ற சர்தார் படேல் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாத மத்தியில் நான் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளேன். எனது பயணம் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளைப் பற்றியது அல்ல. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொறுப்பான உறுப்பினராக இருப்பது மட்டுமே. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் காரணமாக நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இது பலதரப்பு நிகழ்வு. நான் எஸ்சிஓவில் நல்ல உறுப்பினராக இருப்பேன், அதற்கேற்ப கண்ணியமான நபராக நடந்து கொள்வேன்.

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் எஸ்சிஓவில் உறுப்பினராக உள்ளது. அதனால்தான், இந்த முறை உச்சிமாநாடு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. ஆனால் அது எனது பயணத்தின் தன்மையை மாற்றாது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கு மட்டுமல்லாது, எதிர்பாராதவிதமாக என்ன நடக்கும் என்பதற்கும் திட்டமிடுவது முக்கியம். அந்த வகையில், இந்த பயணத்துக்கான எனது திட்டமிடல் இருக்கும்" என தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அறிவிப்பு: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் குறித்து நேற்று (அக்.4) செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 'அரசாங்கத் தலைவர்கள்' (Heads of Government) மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்ல உள்ள இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமை தாங்குவார்" என தெரிவித்தார்.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக 2015 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா ரத்து செய்தது. விதிவிலக்காக, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மட்டும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா இரண்டு மத்திய அமைச்சர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்