“இது மக்களின் அழைப்பு; ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி வரப்போகிறது” - நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி வரப்போகிறது என்றும் இது மக்களின் அழைப்பாக உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜம்முவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி வெளியாக உள்ளன. அந்த முடிவுகள் வைஷ்ணவி தேவியின் ஆசிர்வாதத்தையும், அக்டோபர் 12-ல் வர உள்ள விஜயதசமியின் ஆசிர்வாதத்தையும் கொண்டு வர உள்ளன. இந்த விஜயதசமி புதிய புனித தொடக்கமாக இருக்கப் போகிறது. ஜம்மு, கத்துவா, சம்பா என எதுவாக இருந்தாலும் ஜம்மு அழைக்கிறது. பாஜக ஆட்சி வரப்போகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த பல பத்தாண்டுகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமே இங்கு செழித்து வளர்ந்தன. சாமானிய மக்களுக்கு அவர்கள் கொடுத்தது அழிவைத்தான்.

உங்கள் தலைமுறைகள் சந்தித்த அழிவுக்கு காங்கிரஸ் கட்சிதான் மிகப் பெரிய காரணம். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காங்கிரசின் தவறான கொள்கைகள் உங்களுக்கு அழிவையே தந்துள்ளன. ஜம்முவின் பெரும் பகுதி எல்லையை ஒட்டி உள்ளது. ஒவ்வொரு நாளும் எல்லையில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட அந்த காலகட்டங்களில், 'மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த மீறல்' என்று ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. இது உங்களுக்கு நினைவிருக்கும்.

அங்கிருந்து குண்டுகள் வீசப்பட்டபோது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் வெள்ளைக் கொடி காட்டினர். ஆனால், பாஜக அரசு அந்த குண்டுகளுக்கு எறிகணைகளால் பதிலடி கொடுத்தது. இன்று செப்டம்பர் 28, 2016-ம் ஆண்டு இந்த இரவில்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது. இதுதான் புதிய இந்தியா என்று உலகுக்குச் சொன்ன இந்தியா. புதிய இந்தியா வீட்டுக்குள் புகுந்து கொல்லும்.

தாங்கள் ஏதாவது தவறு செய்தால் மோடி அவர்களை நரகத்தில் கூட வேட்டையாடுவார் என்பது பயங்கரவாதத்தின் எஜமானர்களுக்கு தெரியும். நமது ராணுவத்திடம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரம் கேட்ட கட்சி காங்கிரஸ். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பாக இன்றும் பாகிஸ்தான் மொழி பேசும் கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸை மன்னிக்க முடியுமா?

நாட்டிற்காக இறந்தவர்களை காங்கிரஸ் ஒருபோதும் மதித்தது கிடையாது. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஊடுருவுபவர்கள் இங்கு வருவதை காங்கிரஸ் விரும்புகிறது. அவர்களை தங்கள் வாக்கு வங்கியாக காங்கிரஸ் பார்க்கிறது. அதேநேரத்தில், தங்கள் சொந்த மக்களை கொச்சையான முறையில் அவர்கள் கேலி செய்கிறார்கள்.

பல பத்தாண்டுகளாக காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை, தங்கள் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான கொள்கைகள், அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் நமது தலைமுறைகளின் வீழ்ச்சி மற்றும் சுரண்டலுக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியே.

ஜம்மு காஷ்மீரில் செழிப்பை உறுதி செய்வதில் பாஜக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் உள்ளது. காங்கிரஸ்-தேசிய மாநாடு மற்றும் பிடிபி ஆகியவை அரசியலமைப்பின் எதிரிகள். அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்தை நெரித்தவர்கள்.

ஜம்முவில் பல தலைமுறைகளாக வாழும் பல குடும்பங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட வழங்கப்படவில்லை. இந்த உரிமையை காங்கிரஸ், என்சி மற்றும் பிடிபி ஆகியவை பறித்தன. இன்று ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மாற்றங்களால் காங்கிரஸ், என்சி மற்றும் பிடிபி ஆகியவை கோபமடைந்துள்ளன. உங்கள் வளர்ச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

தங்கள் அரசாங்கம் அமைந்தால், பழைய முறையை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மீண்டும் அந்த பாரபட்சமான முறையைக் கொண்டு வருவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்