திருமலைக்கு நாளை ஜெகன்மோகன் வருகை: சுவாமி நம்பிக்கை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட கோரிக்கை

By என். மகேஷ்குமார்

திருப்பதி: முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திருமலைக்கு வர உள்ளார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறும்போது, “ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பொய்யான குற்றச்சாட்டுகளால் திருப்பதி ஏழுமலையானின் புனிதம் கெட்டுவிட்டது. ஆந்திராவில் உள்ள அனைத்து கோயில்களிலும் செப்டம்பர் 28-ம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை களை நடத்த வேண்டும். அப்போது தான் ஆந்திராவின் இழுக்கு கழுவப்படும்” என்று அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 28-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வர உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நாளை அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக பாதயாத்திரையாக நடந்து சென்று, சுவாமியை வழிபட திட்டமிட்டு உள்ளார். அவரை திருமலையில் அனுமதிக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர், பாஜக, ஜனசேனா கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் ஜெகன் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக திருப்பதி எஸ்பி திருமல ராவிடமும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவிடமும் பாஜகவினர் நேற்று மனு கொடுத்தனர். திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

மாதவி லதா எச்சரிக்கை: பாஜகவை சேர்ந்த மாதவி லதா நேற்று ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பதிக்கு வந்தார். பின்னர், அவர் திருமலைக்கு அலிபிரி வழியாக நடந்து சென்று சுவாமியை தரிசித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேவஸ்தான நிபந்தனைகளை மதிக்காத வேற்று மதத்தை சேர்ந்த ஜெகன் எதற்காக திருமலைக்கு வர வேண்டும். அவர் அரசியல் நாடகமாட நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். அவர் எப்படி திருமலைக்கு வருகிறார் என பார்ப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பதியில் இந்து அமைப்பினர் ஜெகன் மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்த பேருந்து, கார், ரயில் போன்ற வாகனங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்து அமைப்பினர் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்து அமைப்பினர் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினரும் திருப்பதிக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்