18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் திருப்பம்: 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்; நீதிபதிகளை குறை கூறுவதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By எம்.சண்முகம்

தமிழகத்தைச் சேர்ந்த 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி விமலா விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கோ வேறு மாநிலத்துக்கோ மாற்றக்கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், “சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக உள்ளது. மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் ஆகியோர் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “வழக்கறிஞர்கள் நான்கு மாதங்கள் வாதிடுகிறீர்கள். நீதிபதி என்ன கம்ப்யூட்டரா? தீர்ப்பளிக்க கால அவகாசம் வேண்டாமா? அதுவும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. தீர்ப்பு ஜனவரி 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளைப் பற்றி எந்த குற்றச்சாட்டும் கூறுவதை ஏற்க முடியாது. உங்களது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறினர்.

வழக்கில் எதிர்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், “மூன்றாவது நீதிபதி நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.

இதையடுத்து, “நான்கு மாதம் 3 வாரங்கள் கழித்து தீர்ப்பளிக்கப்பட்டது என்று நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் பற்றி தெரிவித்துள்ள வார்த்தைகளையும் வாபஸ் பெற்று மனு தாக்கல் செய்கிறேன்” என்று விகாஸ் சிங் தெரிவித்தார்.

பின்னர், ‘‘நீதிபதி விமலாவுக்கு பதில் மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரித்து தீர்ப்பளிப்பார்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து இத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்