மியான்மரில் இருந்து 900 தீவிரவாதிகள் ஊடுருவல்: மணிப்பூரில் பாதுகாப்பு படைகள் உஷார்

By செய்திப்பிரிவு

இம்பால்: மியான்மரில் பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் நுழைந்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததை தொடர்ந்து மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டை நாடான மியான்மரில் 900 குகி தீவிரவாதிகள் டிரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது மற்றும் வனப் போர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியானது.

இத்தகவலை மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வனப் போர் பயிற்சி மற்றும் டிரோன் தாக்குதல் பயிற்சி பெற்று 900 குகி தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக வந்த எச்சரிக்கையை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது தவறு என்று நிரூபிக்கப்படாத வரை அது 100 சதவீதம் சரி என்றே நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இதுகுறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்தஉளவுத் தகவல் குறித்து இந்திய - மியான்மர் எல்லை மாவட்டங்களின் அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குகி தீவிரவாதிகள் 30 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பரவலாக நுழைந்திருப்பதாக நம்புகிறோம். மேலும்இவர்கள் மைதேயி சமூகத்தினரின் கிராமங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE