ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து குஜராத்தில் ரயிலை கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் ரயில் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் வதோதரா மண்டலத்துக்குட்பட்ட கிம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாள இணைப்பு பிளேட்டை (பிஷ் பிளேட்) நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கழற்றிவிட்டுள்ளனர். அந்த பிளேட்டை அருகில் தண்டவாளத்தின் மீது வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதனால் ரயில் பெட்டிகளை கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப் பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிஷ் பிளேட் பொருத்தப்பட்டு அவ்வழியே ரயில் போக்குவரத்து சீரானது.

இரண்டு தண்டவாளங்களை இணைக்க பிஷ் பிளேட்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பிளேட்கள் மீன் வடிவில் இருப்பதால் பிஷ்பிளேட் என அழைக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், சரக்கு ரயில் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 8-ம் தேதி தலா 70 கிலோ எடை கொண்ட 2 சிமென்ட் பாளங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவ்வழியாக வந்த சரக்கு ரயில் அதன் மீது மோதி நின்றது. எனினும் ரயில் பெட்டிகள் கவிழவில்லை. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மீண்டும் ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE