கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: ‘வடக்கு வங்க லாபி’யில் தொடர்புடைய மருத்துவர் பிருபக்‌ஷாவிடம் சிபிஐ விசாரணை

By செய்திப்பிரிவு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் சிபிஐ கைது செய்து விசாரித்து வரும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப்கோஷிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ் என்பவரிடமும் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. ‘வடக்கு வங்க லாபி’ என்கிற சதி வளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ். இவர் மேற்கு வங்க அரசால் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கக்த்வீப் மருத்துவமனைக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களை மிரட்டிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய ‘வடக்கு வங்க லாபி’யில் மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸுக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகித்த சிபிஐ நேற்று அவரிடம் கொல்கத்தாவில் விசாரணை நடத்தியது.

விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி கூறியதாவது: ஆர்.ஜி.கர் மருத்துவமனை யுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும் கடந்த அக்.9-ம் தேதி எதற்காக மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ் அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்தார் என்பது குறித்து அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் நடந்துவரும் ‘வடக்கு வங்க லாபி’யில் இவருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த லாபியில் முக்கிய பங்குவகித்த மருத்துவ மாணவர்களை மிரட்டிய குற்றத்துக்காக அவீக் டே, ரஞ்சித் சாகா ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர் பிருபக் ஷா பிஸ்வாஸ்மீதும் சட்டப்பிரிவு 351-ன்கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE