திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் கலப்படம்: தேவஸ்தானம் அறிக்கை அளிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

By என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்த விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இதில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது.

இதனால், லட்டு தரம் மிகவும்குறைந்து போனது. இது குறித்து பக்தர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தாலும், கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடுமுதல்வர் ஆனார். இதைத் தொடர்ந்து,திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை அவரது பார்வைக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள் ராவ் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முந்தைய ஜெகன் அரசு மீது ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, குஜராத், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆந்திராவின் பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார்அளித்துள்ளனர். உச்ச நீதிமன்றம்,ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சூழலில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று மதியம் உயர்நிலை கூட்டம்நடைபெற்றது.

இதில் மாநில தலைமைச் செயலர் நீரப் குமார் பிரசாத், அமைச்சர்கள் ஆனம்ராம் நாராயண் ரெட்டி, நிம்மல ராமா நாயுடு, சத்ய பிரசாத், கொல்லா ரவீந்திரா, பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பிறகு, லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் ஜெகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து முழு விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்றுதிருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். ஏழுமலையான் கோயிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில், ஆகம, வைதிக, தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெகன் மறுப்பு: இதற்கிடையே, அமராவதியில் செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மாலை கூறியதாவது: திருமலை லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் உள்ளது என சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன பிறகு குற்றம் கூறுவது ஏன். இப்போது அவரது ஆட்சிதானே நடக்கிறது. இந்த ஆட்சியில்தான் கலப்பட விவகாரம் நடந்துள்ளது. கடந்த 100 நாள் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், மக்களை திசை திருப்ப எங்கள் ஆட்சி மீது சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தியுள்ளார். இது ஒரு கட்டுக்கதை. இவ்வாறு ஜெகன் கூறினார்.

இந்த நிலையில், ‘திருப்பதி லட்டுவிவகாரம் குறித்து உடனடியாக ஒரு குழு அமைத்து, அதன்மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி, ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது வரும் 25-ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE