‘இந்து’ தமிழ் செய்தி எதிரொலி: ஜெர்மனியில் தமிழர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியால் ஜெர்மனியின் மூன்சென் நகரில் தமிழ் வகுப்புகள் நடத்தும் தமிழர்களை சந்தித்தார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசின் தமிழ் இணைய வழிக் கல்விக் கழகம் (டிவிஏ) செயல்படுகிறது. டிவிஏ உதவியுடன் ஜெர்மனியில் வாழும் தமிழர்கள், தம் குழந்தைகளுக்காக தமிழ் வகுப்புகள் நடத்துகின்றனர். ஜெர்மனியின் மூன்சென் நகரில் நடைபெறும் தமிழ் வகுப்புகள் பற்றி ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 4-ம் தேதி செய்தி வெளியானது.

அந்த செய்தியை படித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூன்சென் நகருக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். கடந்த வாரம் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தோ - ஜெர்மன் இளம் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டார்.

அதன்பின் மூன்சென் நகரில் டிவிஏ உதவியால் நடைபெறும் தமிழ் வகுப்புகள் பற்றிய ஆலோ சனைக் கூட்டத்தையும் நேற்று முன்தினம் நடத்தினார். இதில், அமைச்சர் தியாகராஜனுடன், தமிழ் வகுப்புகளை நடத்தும் மூன்சென் தமிழர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: எனது ஐரோப்பியப் பயணத்தின் போது சரியான நேரத்தில் மூன்சென் தமிழ் வகுப்புகள் குறித்த செய்தி வெளியாகி இருந்தது. இதில், எனது துறையின் கீழ் இயங்கும் தமிழ்வழி இணையக் கல்விக் கழகத்துடன் நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு உங்கள் குழந்தை களுக்கு தாய்மொழியான தமிழை சிறப்பாகக் கற்றுக் கொடுப்பதையும் அறிந்தேன். இதுபோன்ற வெளிநாடுகளில் தமிழ் வகுப்புகள் நடத்துவதை நாம் ஆட்சிக்கு வரும்போது ஓர் இலக்காகவே வைத்திருந்தோம்.

தற்போது இக்கல்வியில் சான்றிதழ், டிப்ளமா சான்றிதழுக்கு அடுத்த கட்டமாக இளநிலை பட்டம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். பிஜி நாட்டில் இளநிலை பட்டக் கல்விக்காக ஆசிரியர்கள் 2 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து அனுப்பியுள்ளோம். எங்கள் துறையின் சார்பில், கன்னிமாரா போன்ற நூலகங்களில் உள்ள பழைய தமிழ் நூல்களின் பதிப்புரிமைகளையும் பெற்று அவற்றை தமிழ்நாடு அரசின் இணையதள நூலகமாகப் பதிவேற்றம் செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE