மே.வங்க வெள்ளம் | டிவிசியிலிருந்து விலகப் போவதாக பிரதமருக்கு மம்தா கடிதம்; பாஜக பதிலடி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் 5 லட்சம் கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டதே மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்குச் (டிவிசி) சொந்தமான அதனால் பராமரிக்கப்படும் மைதான் மற்றும் பஞ்சாட் அணைகளில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், திட்டமிடப்படாமல் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தொடர்பாக உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதனால் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களான, புர்பா பர்தாமன், பஸ்சிம் பர்தாமன், பிர்பூம், பங்குரா, ஹவுரா, ஹூக்ளி, புர்பா மெதினிபூர் மற்றும் பட்சிம் மெதினிபூர் ஆகிய பகுதிகள் பேரழிவு தரும் வெள்ளத்தில் மூழ்கி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர், லோயர் தாமோதர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன. சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அழிவு, உள்கட்டமைப்பு, வீடுகள், கால்நடைகள் இழப்பு போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான அதிகமான மக்கள் துன்பச் சூழலில் சிக்கியுள்ளனர்.

தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனின் (டிவிசி) திட்டமிடாமல் தண்ணீரை விடுவிப்பதே இந்த வெள்ளத்துக்கு காரணம். இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம். டிவிசி வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் இருந்து மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது. இது மேற்கு வங்கத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்தப் பிராந்தியத்தை வெள்ளம் பாதிக்கும் பகுதியாக மாற்றியுள்ளது.

இந்த ஒருதலைபட்சமான போக்கு தொடர்ந்தால், எனது அரசு டிவிசியில் இருந்து முற்றிலும் விலகிவிடும், மேற்குவங்கத்தின் பங்களிப்பை திரும்பப் பெறும். இந்த அநீதியால் ஆண்டுதோறும் எங்கள் மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சி தலைவரான பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மம்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “டிவிசியுடனான தொடர்பை மம்தா பானர்ஜி துண்டித்துக் கொண்டால் 8 மாவட்டங்கள் மின்சாரத்தை இழக்கும். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனால் நடத்தப்படும் மின் நிலையங்கள் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரம் வழங்குகின்றன என்பதை மம்தா பானர்ஜி அறிய மாட்டாரா?” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE