‘திருப்பதி லட்டு சர்ச்சை’ - தீவிர விசாரணை நடத்த வேண்டும்: மத்திய உணவுத் துறை அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஆந்திரப் பிரதேச முதல்வர் கூறியது மிகவும் கவலைக்குரியது. இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை. அதோடு, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவும், இன்றைய தினம் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து பேசுவதாக தெரிவித்தார்.

முன்னதாக, அமராவதியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சருமான நார லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரசுவாமி கோயில் மிகவும் புனிதமான கோயில். ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் அரசு, மக்களின் மத உணர்வுகளை மதிக்கவில்லை” என விமர்சித்திருந்தார்.

நேற்று (செப். 19) செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமணா ரெட்டி, திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார்.

மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், திருப்பதி திருமலை பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும் லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததா என்பது குறித்து கடந்த ஜூலையில் ஆய்வு செய்துள்ளது. அதன் ஆய்வு முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சுப்பா ரெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "திருமலையின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தி சந்திரபாபு நாயுடு பெரும் பாவம் செய்துள்ளார். திருமலை பிரசாதம் குறித்த சந்திரபாபு நாயுடுவின் கருத்து மிகவும் மோசமானது. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்ல மாட்டார்கள்.

அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், திருமலை பிரசாதம் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் சத்தியம் செய்யத் தயாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திருப்பதியில் தினமும் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க கோயில் அறக்கட்டளை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இ-டெண்டர்கள் மூலம் அதிக அளவில் நெய்யை வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்