கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டியும், சுகாதார பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் ஊழல் முறைகளுக்கு காரணமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்துள்ளதையடுத்து இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் வரும் சனிக்கிழமை (செப்.21) முதல் அவசர சிகிச்சைகளுக்கான பணிக்கு திரும்புவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும் இப்போதைக்கு வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தொடங்குவது குறித்த அறிவிப்பு எதையும் அவர்கள் வெளியிடவில்லை.

முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் நலன்கருதி மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். போலீஸ் கமிஷனர், சுகாதார அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE