டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் ஆதிஷி: ஆம் ஆத்மி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷி வரும் செப்டம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆதிஷி முதல்வராக பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. பின்பு டெல்லி துணைநிலை ஆளுநரின் முன்மொழிவைத் தொடர்ந்து செப்.21-ம் தேதி பதவியேற்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறும்போது, முதலில் ஆதிஷி மட்டுமே பதவி ஏற்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவரது அமைச்சரவைக் குழுவும் பதவி ஏற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முந்தைய கேஜ்ரிவால் அரசில் அமைச்சர்களாக இருந்த கோபால் ராய், கைலாஷ் கேலாட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அப்படியே தக்கவைக்கப்படுவார்கள். மேலும் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று தெரிவித்தனர்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையிலிருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அரவிந்த் கேஜ்ரிவால், செவ்வாய்க்கிழமை (செப்.17) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சரான ஆதிஷி ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கல்காஜி எம்எல்ஏ-வான ஆதிஷி மர்லேனா, ஆம் ஆத்மி அரசில் அதிகபட்ச துறைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பின்பு டெல்லி முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கட்சியை வழிநடத்த பல்வேறு நபர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டது என்றாலும், முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சியில் முக்கியப் பங்கு வகித்ததால் அவர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1981-ம் ஆண்டு பிறந்த ஆதிஷி, 2001-ம் ஆண்டு இளங்கலை வரலாற்றுப் படிப்பை முடித்தார். ஆ க்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு உதவித்தொகை பெற்று முதுகலை வரலாறு படித்தார். ஆம் ஆத்மி கட்சியில் 2013-ம் ஆண்டு இணைந்தார். டெல்லி அரசின் ஆலோசகராக இருந்தவர் 2020-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவர்கள் கைதான நிலையில்தான் இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. தற்போது கல்வி மற்றும் பொதுப்பணித் துறை என முக்கியமான துறைகளை தன் கையில் வைத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE