27 நாடுகளில் பரவும் புதிய எக்ஸ்இசி வகை கரோனா

By செய்திப்பிரிவு

லண்டன்: புதிய எக்ஸ்இசி வகை கரோனா 27 நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த கரோனா வகை, ஏற்கெனவே வந்த ஒமிக்ரான் திரிபுகள் கேஎஸ்.1.1 மற்றும் கேபி.3.3 ஆகியவை இணைந்த கலவையாக உள்ளது. இது விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய வகை கரோனா ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உட்பட பல நாடுகளில் எக்ஸ்இசி வகை கரோனா பரவத் தொடங்கியது. இந்த ஒமிக்ரான் வகை திரிபு வரும் குளிர்காலத்தில் வேகமாக பரவலாம் எனவும், தடுப்பூசிகள் மூலம் இதை தடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுவரை போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல் மற்றும் சீனா உட்பட 27 நாடுகளில் 500 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எக்ஸ்இசி வகை புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டன் பல்கலைக் கழகத்தின் மரபியல் மைய இயக்குநர் பேராசிரியர் ஃபிரான்காயிஸ் பாலக்ஸ் கூறுகையில், ‘‘எக்ஸ்இசி எனப்படும் புதிய வரை கரோனா வேகமாக பரவும் திறனுடையது என்றாலும், இதன் பரவலை தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE