‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதலும், வலுக்கும் எதிர்ப்பும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பது அவர்களது வாதம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின்படி தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. ஒரே நாடு, ஒரே தேர்தல் - உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்:

பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துதலும்: இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும். முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். இரண்டாம் கட்டமாக, பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும். அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வெண்டும். நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டும். செயல்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.

காங்., திமுக உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு: “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதனை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல. இது பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. இது வெற்றி பெறாது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை எதிர்க்கின்றன.

எதிர்ப்பு ஏன்? - தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இதற்காகச் சில மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலத்தைக் குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானதாகக் கருதப்படும்.

மேலும், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ‘பலம்’ எப்படி? - ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த முன்மொழியும் இந்தத் திட்டத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் பல நீதிபதிகளும் இத்திட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இதனை நடைமுறைப்படுத்த, அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஆறு திருத்தங்கள் தேவை. இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தாலும், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது ஆளும் கூட்டணிக்கு சவாலாக இருக்கும். மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் 85 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் 164 வாக்குகள் தேவை.

இதேபோல், மக்களவையில் மொத்தமுள்ள 545 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கொண்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அவையில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் மட்டுமே பெரும்பான்மை கணக்கிடப்படும் என்பதால் நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடரபான மசோதா நிறைவேற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எல்லா தடைகளையும் கடந்தால் மட்டுமே அரசு திட்டமிடுவதுபோல் இச்சட்டத்தை 2029-ல் நடைமுறைப்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்