ஜம்மு காஷ்மீர் தேர்தல் - காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஜம்மு: பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்.18) நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணி நிலவரப்படி 11.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கடுமையான குளிர் நிலவி வரும் சூழலில் இதுவரை எவ்வித சர்ச்சையும், பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்ற தகவல் வந்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கும்படி காஷ்மீர் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் வாக்களிக்க சிறப்பு வாக்குச்சாவடி: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் இதில் வாக்களிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்றனர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE