ஜெர்மனியில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திய இரு தமிழ் பெண்கள்

By ஆர்.ஷபிமுன்னா

டுசுல்டாஃர்ப்: ஜெர்மனியில் இரு தமிழ் பெண்கள் நடத்திய புத்தகக் கண்காட்சி நிகழ்வு பாராட்டு பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானது ஜெர்மனி. மோட்டார் தொழிலுக்கு பெயர்போன டுசுல்டார்ஃர்ப் நகரில் சுமார் 500 தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களை போல், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் தாய்மொழியிலான நூல்கள் கிடைப்பதில்லை. யாராவது கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், தமிழகத்திலிருந்து அதிக செலவு செய்து தபாலில் பெற வேண்டும். வெளிநாடுகளில் தமிழ் நூல்களுக்கு எனத் தனியாக புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவதில்லை.

இந்நிலையில், டுசுல்டார்ஃப் நகரில் சில மாதங்களுக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மிகவும் சிறிய வகையிலான இக்கண்காட்சியை அங்கு வாழும் சென்னையின் பாரதி யுவராஜ், மதுரையின் பூமாதேவி அய்யப்ப ராஜா ஆகிய இரண்டு தமிழ் பெண்கள் தனிமுயற்சியில் நடத்தி பாராட்டைப் பெற்றுள்ளனர். இதன் மீது 'இந்து தமிழ் திசை' நாளேட்டின் 'பெண் இன்று' இணைப்பிற்காக இருவரையும் டுசுல்டாஃர்ப்பில் சந்தித்த போது, பாரதியும், பூமாதேவியும் உற்சாகமாகப் பேசினர்.

''ஜெர்மனியில் ஐந்து வருடங்களாக நான் எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். இங்கு வாசிப்பு என்பது சிறுவயது குழந்தைகளிடமும் பார்க்க முடியும். படிக்க தெரியா விட்டாலும் படங்களுடனான நூல்கள் அவர்களது வாசிப்பை வளர்க்கிறது. இதனால், ஜெர்மனியின் புத்தக் கடைகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். எனினும், இவற்றில் தமிழ் நூல்கள் கிடைக்காது. இதற்காக தமிழகத்திலிருந்து நூல்களை வரவழைத்து ஒரு புத்தக கண்காட்சி நடத்துவது எங்கள் நீண்டநாள் கனவாக இருந்தது. இதற்காக நானும் தோழி பூமாதேவியும் ஆலோசித்தோம். டுசுல்டாஃர்ப் வாழ் தமிழர்களில் பலரும் எதிர்பாராத அளவில் ஆர்வம் காட்டினர். இது, ஜெர்மனியின் இதர நகரங்களில் வாழும் தமிழர் உள்ளிட்ட வேற்று மொழியாரும் எங்களை போல் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான யோசனையை அளித்துள்ளது'' என மகிழ்ந்தார் பாரதி.

தமிழரான பாரதி, டிசிஎஸ் பெறுநிறுவன ஐ.டி. துறையில் பணி செய்தவர். தன் கணவரது ஜெர்மனி வாய்ப்பால் குடும்ப பொறுப்பை ஏற்கப் பணியை துறந்தவர். தற்போது ஜெர்மன் வாழ் தமிழராகி விட்டார் பாரதி. இவரைப் போல், பெங்களூருவில் ஐ.டி துறையில் பணி செய்தவர் பூமாதேவி. இவரும் தன் கணவருடன் 8 வருடங்களுக்கு முன்பிலிருந்து ஜெர்மனிவாசியானவர். ஜெர்மனியில், இவருக்கும் கிடைத்த வாய்ப்பால் பூமாதேவியும் இப்போது அருகிலுள்ள நகரமான கொலோனின் கோஃபினிட்டி-க்ஸ் ஐ.டி பெருநிறுவனத்தில் பணியாற்றுகிறார். பாரதியை போல் பூமாதேவிக்கும் இருந்த தமிழ் நூல் வாசிப்பு ஆர்வம், தனி இருபெண்களாக புத்தகக் கண்காட்சி நடத்தி சாதிக்க வைத்து விட்டது.

''கண்காட்சிகாக அதிக எண்ணிக்கையில் நூல்களை இங்கு வரவழைப்பது சிரமம். எனவே, யாருக்கு என்ன நூல் தேவை என்ற பட்டியலை தோராயமாக சேகரித்தோம். எங்களுக்கு உதவியாக இருந்த கணவன்மார்கள் அளித்த உற்சாகம் எங்களை களம் அமைக்கச் செய்தது. கண்காட்சிக்கு தேவைப்பட்ட இடத்தை அளிக்க டுசுல்டாஃர்ப்பின் ஒரு சமூகக்கல்வி சார்ந்த ஜெர்மனிய கிளப் முன்வந்தது. இவர்களது கிளப்பிலிருந்த புல்வெளி பகுதியில் இடமளித்தனர். கண்காட்சிக்கு வந்தவர்கள் இந்த கிளப்பிலும் உறுப்பினராக கூடுதல் பலன் கிடைத்தது.

இக்கண்காட்சியில் மிஞ்சும் நூல்களால் எங்களுக்கு சுமார் ரூ.20,000 இழப்பு ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஓரிரு நூல்கள் மட்டுமே மிஞ்சி எங்களுக்கு லாபம், நட்டம் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. டுசுல்டாஃர்புடன் அருகிலிருந்த கொலோன் வாழ் தமிழர்களும் வந்திருந்தனர். தகவலறிந்த சில இலங்கை தமிழர்களும் வந்து ஆர்வமுடன் நூல்களை வாங்கினர். தாமதமாக வந்த சிலருக்கு நூல்கள் கிடைக்காதமையால் அதிக வருத்தங்களுடன் திரும்பினர்' என வியப்பை காட்டினார் பூமாதேவி.

ஜெர்மனியில் எந்த நாட்டினராக இருப்பினும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. கண்காட்சி நடைபெற்ற கிளப்பில் வாரம் ஒருமுறை டுசுல்டார்ஃப் தமிழர்களுக்காக தமிழ் வகுப்பு நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இந்த கண்காட்சியில் வானதி, விகடன், பயில், ஆழி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பதிப்பகங்களின் நூல்களே இடம் பெற்றன. இவர்களிடம் முன்கூட்டியே பணம் கொடுத்து நூல்களை பெற்றுள்ளனர். டிஎச்எப்ஐ பதிப்பகம் மட்டும் நூல்கள் விற்றபின் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டது. இதுபோன்ற புத்தகக் கண்காட்சியை தமிழக அரசே வெளிநாடுகளில் நடத்தினால் தமிழர்கள் பயன் பெறுவார்கள். இதற்கு உதவ ஐரோப்பிய நாடுகளின் தமிழ் சங்கங்களும் தயாராக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE