எஸ்யு-30 போர் விமானங்களை மேம்படுத்த இந்தியாவின் உதவியை நாடும் அர்மீனியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எஸ்யு-30 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் உதவியை அர்மீனியா நாடியுள்ளது. இதற்காக இந்தியாவிடம் இருந்து கருவிகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

எஸ்யு ரக போர் விமானங்களை ரஷ்யா தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த எஸ்யு ரக போர் விமானங்கள் இந்தியா, அர்மீனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வாங்கி தங்களது விமானப் படையில் இணைத்துள்ளன. இந்நிலையில் இந்த வகை விமானங்களை பயன்படுத்தும் அர்மீனியா, தற்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. எஸ்யு-30 ரக போர் விமானத்தில் இணைப்பதற்காக ராக்கெட் சிஸ்டம், ஆர்டிலரி கன், ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள்போன்றவற்றை இந்தியாவிடமிருந்து பெறுவதற்கான ஆர்டரை அர்மீனியா கொடுத்துள்ளது.

2 முறை போர்: சோவியத் யூனியன் பிரிந்த பின்னர் அர்மீனியா, அஜர்பைஜான் நாட்டுடன் 2 முறை போரில் ஈடுபட்டது. தற்போது தனது ராணுவத்தின் பலத்தை பெருக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. எஸ்யு-30எஸ்எம் ரக போர் விமானங்களில் இந்த கருவிகளை பொருத்துவதற்காக தற்போது ஆர்டர் கொடுத்துள்ளது அர்மீனியா. இந்த கருவிகளை இந்தியா தயாரித்து தனது எஸ்யு-ரக போர் விமானங்களில் பயன்படுத்துகிறது.

மேலும் ஏவியானிக்ஸ், எலக்ட்ரானிக் போர்க் கவச உடைகள், ஆயுதங்களையும் இந்தியாவிடம் அர்மீனியா கோரி வருகிறது. இதுகுறித்து அர்மீனியா விமானப் படையின் கர்னல் ஹோவ்ஹான்ஸ் வர்தன்யா கூறும்போது, “இந்தியாவில் உள்ள எச்ஏஎல்நிறுவனத்திடம் போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை கேட்டுள்ளோம். இதன்மூலம் எங்களிடம் இருக்கும் எஸ்யு-30 ரக போர் விமானங்களை நவீனமயமாக்க முடியும். எங்களின் ராணுவ பலமும் பெருகும்” என்றார். ரஷ்யாவிடம் அனுமதி பெற்று எஸ்யு ரக போர் விமானங்களை தனது நாசிக் தொழிற்சாலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE