மம்தா பானர்ஜி இல்லத்தில் நடந்த பயிற்சி மருத்துவ மாணவர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்தில் நடந்த பயிற்சி மருத்துவ மாணவர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்தவழக்கு தொடர்பாக சஞ்சய் ராய்என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், சஞ்சய் ராய், கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் மம்தா அழைத்தார். ஆனால் பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே வருவோம் என்று போராட்டம் நடத்திவரும் பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக முதல்வர், மாணவர்கள் இடையே 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் மாண வர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சனிக்கிழமை திடீரென வருகை தந்தார்.

ஆனால் தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று பயிற்சி மருத்துவர்கள்தெரிவித்தனர். அப்போது போராட்டத்தை கைவிடும்படியும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றும்முதல்வர் மம்தா கேட்டுக்கொண்டார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. எனவே இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு முதல்வர் தரப்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இது 5-வது மற்றும் இறுதி அழைப்பு என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காளிகாட் பகுதியிலுள்ள முதல்வரின் வீட்டுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். மாலை 6.20 மணிக்கு முதல்வரின் வீட்டை மாணவர்கள் 30 பேர் அடைந்தனர். இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தைதொடங்கியது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இரவு9 மணியளவில் நிறைவடைந்தது. அப்போது இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரி வித்தனர்.

அப்போது பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பான தங்களது கோரிக்கையை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அறிவித்தனர். மேலும் பேச்சுவார்த்தையின்போதுநடந்த கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி, பிரமாணப்பத்திரமாக தயாரித்து அதில் இருதரப்பினரும் கையெழுத்திடவும், இரு தரப்பிலும் அதற்கான நகல்களை வைத்துக் கொள்ளவும் மேற்கு வங்க அரசு சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட மாணவர்களின் 5 அம்சக் கோரிக்கையையும் அரசு அப்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து தொடர் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்துபயிற்சி மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கு வங்க அரசுடன் அடுத்த கட்டமாக விரிவான பேச்சு வார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE