மோடி 3-வது முறை பிரதமராகி இன்றுடன் 100 நாள் நிறைவு: ரூ.15 லட்சம் கோடி திட்டங்கள் அமல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. அத்துடன் அவர் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்று இன்றுடன் 100 நாட்களும் ஆகிறது. இந்த 100 நாட்களில் ஏராளமான திட்டங்களை செயல்படு்த்தியுள்ளதாக மத்தியஅரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களின் செயல்பாடு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இன்றுலட்சாதிபதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வருமானம் ஈட்டுவதாக அவர்கள் பதிவு செய்துள்ளனர். இது, வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கேள்விகேட்பவர்களுக்கு சரியான பதிலாக அமைந்துள்ளது.

இந்த 100 நாட்கள் காலகட்டத்தில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திட்டங்களை அறிவிக்கும்போதே அவற்றுக்கான திறப்பு விழா தேதிகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்படும் திட்டங்களை குறித்த காலத்தில் முடிக்க அமைச்சர்களே நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு என்றாலே அரசாங்க வேலைதான் என நாம் தவறாக புரிந்து கொள்ளகூடாது. இதுபோன்ற உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலமாக வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தியும், வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (எம்இபி) நீக்கியும், கச்சா, பனை, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியும் விவசாயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

75,000 மருத்துவ இடங்கள்: தீவிர முயற்சிகளின் பலனாக 75,000 புதிய மருத்துவ இடங்கள் இந்த 100 நாட்களில் கூடுதலாக உருவாக்கப்பட்டிருப்பது இந்த அரசின் ஒரு மைல் கல் சாதனை. இது, மருத்துவ கல்விக்காகமாணவர்கள் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாக குறைக்கும் என்பதுடன், நமது சுகாதார அமைப்பை மேலும்வலுவுள்ளதாக்கும்.

பேரிடர் மேலாண்மை மசோதா: பேரிடர் மேலாண்மை திருத்தமசோதா 2024 அறிமுகப்படுத்தப்பட்டது இந்த 100 நாள் ஆட்சியின் மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது. இதைத்தவிர, நகர்ப்புற வெள்ள மேலாண்மை, தீயணைப்பு சேவைகள், பனிப்பாறை ஏரி வெடிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பேரிடர் தணிப்பு முயற்சிகளுக்காக மாநிலங்களுக்கு இதுவரை ரூ.12,554 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE