ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: உள்ளூர் கட்சி, சுயேச்சைக்கு குறிவைத்து களமிறங்கும் பாஜக

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வரும் 18, 25, அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் நாள் நெருங்கியுள்ளதால் பாஜக,காங்கிரஸ்,ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக தனித்து ஆட்சியமைக்க பாஜக முயன்று வருகிறது. இதற்குமுன்னதாக 2014-ல் பிடிபி கட்சியுடன் இணைந்து கூட்டணிஆட்சியை பாஜக அமைத்திருந்தது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தனித்து ஆட்சியமைக்க 46 இடங்களில் வெற்றி பெறவேண்டும். இந்தத் தேர்தலில் உள்ளூர் கட்சிகள் 7-ம், 32 சுயேச்சைகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க உள்ளூர் கட்சிசார்பில் வெற்றி பெறும் வேட்பாளர்களின் ஆதரவும், சுயேச்சைகளின் ஆதரவும் கண்டிப்பாக தேவை. எனவே, பாஜக மேலிடம் அவர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சைகள், உள்ளூர் கட்சிகளின் ஆதரவை பாஜக மேலிடம் கேட்டுப் பெறும் என்று தெரியவந்துள்ளது.மேலும், தேர்தலுக்கு முன்பாகவே அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வர பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE