பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை: மம்தா பானர்ஜியின் இறுதி அழைப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு 5-வது முறையாக மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இதுதான் இறுதி அழைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

36வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள், சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்த்யா பவனுக்கு வெளியே 8 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு கடந்த சனிக்கிழமை (செப். 14) நேரில் வருகை தந்த முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் சமாதானத்துக்காக தான் மேற்கொள்ளும் கடைசி முயற்சி இது என்றும் கூறினார்.

முதல்வரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில், மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது கடிதத்தில், “தல்வர் மற்றும் உங்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பிற்காக நாங்கள் உங்களை அணுகுவது இது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாகும். முதல்வரின் காளிகாட் இல்லத்தில் ஒரு திறந்த மனதுடன் ஒரு கலந்துரையாடலுக்கு உங்களை மீண்டும் அழைக்கிறோம்.

நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், சந்திப்பை நேரலை செய்யவோ அல்லது வீடியோ எடுக்கவோ முடியாது. மாறாக, கூட்டத்தில் பேசப்படும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினராலும் கையெழுத்திடப்படும். பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள பயிற்சி மருத்துவர்களின் பிரதிநிதிகள் இன்று (செப். 16) மாலை 4.45 மணிக்கு முதல்வரின் இல்லத்திற்கு வாருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE