அமெரிக்காவிடம் இருந்து 31 ஹன்டர் - கில்லர் அதிநவீன ட்ரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. இதற்காக ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது போர்க் கப்பலை அனுப்பி உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.33,500 கோடி மதிப்பில் எம்.கியூ-9பி ஹன்டர் - கில்லர் என்றழைக்கப்படும் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதிநவீன ட்ரான்களை வாங்கு வதற்கான ஒப்பந்தத்துக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு மத்தியபாதுகாப்புத் துறையும் ஒப்புதல்அளித்து நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளது. அதன்பின்,பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்குஇறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.இதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம்கையெழுத்தாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஹன்டர் - கில்லார் அதிநவீன ட்ரோன்களை பராமரித்தல், பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் அமெரிக்கா மையம் அமைக்கும். அத்துடன், ஹன்டர் - கில்லர் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கும்.இந்த ஒப்பந்தத்தின்படி, எம்.கியூ-9பி ட்ரோன்கள் தயாரிப்புக்கானதொழில்நுட்பத்தை அமெரிக்காநேரடியாக வழங்காவிட்டாலும், அதன் பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே இணைத்து உருவாக்கப்படும். ட்ரோன் தயாரிப்பு ஜெனரல் அடாமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த அதிநவீன ட்ரோன்களை இங்கு உருவாக்கும். அதற்கான உதிரிபாகங்களில் 30 சதவீதத்தை இந்திய நிறுவனங்களிடமே கொள்முதல் செய்யும்.

அமெரிக்காவின் எம்.கியூ-9பி அதிநவீன ட்ரோன்கள், போர்விமானங்களுக்கு நிகராக இருக்கும். இந்த வகை ட்ரோன்கள் மிக உயரத்தில் 40 மணி நேரம் தொடர்ந்து பறக்கக் கூடியது.மேலும், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் படைத்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அதிநவீன ட்ரோன்களுடன் 170 அதிநவீன ஏவுகணைகள், ஜிபியு-39பி இலக்கை துரத்தி சென்று தாக்கும் 310 வெடிகுண்டுகள், வழித்தடம் அறியும் கருவிகள், சென்சார் கருவிகள், நிலத்தில் இருந்து கட்டுப்படுத்தும் கருவிகள் மற்றும் பல்வேறு கருவிகளையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE