அரசு நிலத்தில் சிம்லா மசூதி விரிவாக்கம்: வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் அமைந்துள்ள சஞ்சாலி என்றபகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இதன் அருகே அரசு நிலம் உள்ளது.

இந்நிலையில் மசூதியின் சுற்றுச்சுவர் விரிவுபடுத்தப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதை இடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் கடந்த 11-ம் தேதிபோராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது போராட்டக் காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை போலீஸார் கலைத்தனர். இந்த மோதலில் போலீஸார் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் நிலவியது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவிபதிவுகளை ஆராய்ந்து, வன்முறையில் ஈடுபட்ட சுமார் 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் உள்ளூர் விஎச்பிதலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சஞ்சாலி மசூதியின் சுவரை இடிக்க, முஸ்லிம் நலக்குழுவினர் முன்வந்தனர். சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை காப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE