‘நீதி மட்டுமே வேண்டும்’ - முதல்வர் மம்தாவின் தேநீர் உபசரிப்பை மறுத்த பயிற்சி மருத்துவர்கள்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் தேநீர் உபசரிப்பை ஏற்க மறுத்து தங்களின் போராட்டத்தை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றனர். ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கொடூரமாக கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கிடைத்தால் மட்டுமே தேநீர் அருந்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பயிற்சி மருத்துவர் குழுவில் இருந்தவரான மருத்துவர் அகீப் கூறுகையில், “அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்காக நாங்கள், காலிகட்டுக்கு அழைக்கப்பட்டோம். அங்குச் சென்றோம். ஆனால், அங்கு நாங்கள் சென்ற பின்னர் நிலவிய சூழலால் கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையில் சமரசம் செய்து கொண்டோம். அப்போது, வெளியே வந்த முதல்வர் தேநீர் அருந்தியதும் கூட்டத்தைத் தொடரலாம் என்று தெரிவித்தார். ஆனால் பயிற்சி மருத்துவர்கள் நீதி கிடைத்த பின்பே தேநீர் அருந்துவோம் என்றனர்.

பின்பு கூட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை கைவிட்டு, கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல்களைக் கேட்டோம். அதற்கு மிகவும் தாமதமாகி விட்டது. இப்போது எதுவும் செய்ய முடியாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. சந்தீப் கோஷீன் கைது எங்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்துகிறது. அவர் செய்தது ஒரு ஒருங்கிணைந்தக் கூட்டுக் குற்றம். அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பதிவி விலக வேண்டும். அதனால் போரட்டத்தைத் தொடர்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க சுகாதாரத்துறை தலைமையகத்தின் எதிரே அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.10) முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை திடீரென வருகை தந்தார். முதல்வரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு தாமதம் செய்ததற்காகவும், சாட்சியங்களை சிதைத்ததற்காகவும் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூர் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை மத்திய புலனாய்வுத்துறை சனிக்கிழமை கைது செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE