‘கடைசி முயற்சி’ - கொல்கத்தாவில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா சந்திப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, பணிக்குத் திரும்புமாறு அவர்களை வலியுறுத்தினார். போராட்டம் நடத்திய மருத்துவர்களை சமாதானப்படுத்த தான் மேற்கொண்ட கடைசி முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க சுகாதாரத்துறை தலைமையகத்தின் எதிரே அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று (சனிக்கிழமை) 5வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (சனிக்கிழமை) திடீரென வருகை தந்தார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தியதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். போராட்டம் நடத்திய மருத்துவர்களை சமாதானப்படுத்த தான் மேற்கொண்ட கடைசி முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

முதல்வரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் கடிதம் எழுதினர்.

மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி என்ற சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள நான்கு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், “ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் மிகவும் இழிவான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களாகிய நாங்கள், அச்சமின்றி பொதுமக்களுக்கு எங்களது கடமைகளை ஆற்ற முடியும். இந்த கடினமான காலத்தில், உங்கள் தலையீடு எங்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக செயல்படும். எங்களைச் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டும்.” என்று தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE