“விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தப்படும்” - காஷ்மீரில் பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

தோடா (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீரில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கான நிதி உதவி ரூ. 6,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தோடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “இந்த முறை ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டது.

அதன்பிறகு, குடும்ப அரசியல் செய்பவர்கள், இந்த அழகான மாநிலத்தை குழிபறிக்கத் தொடங்கினார்கள். நீங்கள் நம்பிய இந்த அரசியல் கட்சிகள் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படவில்லை. அந்த அரசியல் கட்சிகள், தங்களுடைய சொந்த குழந்தைகளை மட்டுமே உயர்த்திக் கொண்டன. ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகள், உங்களை தவறாக வழிநடத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஜம்மு காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் புதிய தலைவர்கள் உருவாக இவர்கள் அனுமதிக்கவில்லை. 2000க்கு பிறகு இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் முன்னேறுவதை இங்குள்ள குடும்ப அரசியல் கட்சிகள் அனுமதிக்கவில்லை. அதனால்தான் 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சித்தேன். பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2020 இல், DDC தேர்தல்கள் முதல் முறையாக நடத்தப்பட்டன. எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஏனெனில், இந்த தேர்தல்களால்தான் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடைகிறது.

ஜம்மு காஷ்மீரில் இம்முறை நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடக்கிறது. ஒரு குடும்பம் காங்கிரஸுக்கும், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சிக்கும், ஒரு குடும்பம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் சொந்தமானது. இந்த மூன்று குடும்பங்களும் உங்களுக்கு பாவத்தை மட்டுமே செய்தன. அதைத் தவிர வேறு எதையும் அவர்கள் உங்களுக்கு செய்யவில்லை.

கடந்த காலங்களில் ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சரே கூட, லால் சவுக்கிற்கு செல்ல பயப்படும் சூழல் இருந்தது. ஆனால், பயங்கரவாதம் இன்று தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பாஜக அரசு திறந்து வைத்துள்ளது. தோடாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இங்குள்ள இளைஞர்கள் சிறந்த கல்விக்காக நாட்டின் பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு காலத்தில் இருந்தது. இன்று மருத்துவக் கல்லூரி, எய்ம்ஸ், ஐஐடி ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கான இடங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

இப்போது, ​​பாஜக-வின் ஜம்மு காஷ்மீர் பிரிவு பண்டிட் பிரேம்நாத் டோக்ரா வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும். இங்கு கல்லூரி செல்லும் இளைஞர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படும். பயங்கரவாதம் இல்லாத, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கும் அத்தகைய ஜம்மு காஷ்மீரை பாஜக உருவாக்கப் போகிறது. சுற்றுலாவை மேலும் விரிவுபடுத்தவும், நீங்கள் பயணிக்க எளிதாக இருக்கும் வகையில் மத்திய பாஜக அரசும் இங்கு போக்குவரத்து இணைப்பை பலப்படுத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் தொலைதூர பகுதிகளை ரயில் மூலம் இணைக்கிறோம். ராம்பன் மாவட்டம், தோடா கிஷ்த்வார் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ரயில் மூலம் நேரடியாக டெல்லியை அடையலாம், உங்கள் இந்த கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். மிக விரைவில், டில்லியில் இருந்து ரம்பன் வழியாக ஸ்ரீநகர் செல்லும் ரயில் பாதை பணி நிறைவடையும்.

ஏழைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் சிறந்த சிகிச்சை வழங்குவதே எங்கள் உறுதி. ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கான காப்பீடு வசதியை கொண்டுள்ளன. இதனை ரூ. 7 லட்சமாக உயர்த்த ஜம்மு காஷ்மீர் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.18,000 டெபாசிட் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீர் விவசாயிகள், பிரதமர் சம்மன் நிதியின் கீழ் 6,000 ரூபாய் பெறுகிறார்கள். இப்போது பாஜக அதை ரூ.10,000 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்