மதுபான கொள்கை ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிஉள்ளது. அலுவலகம் செல்லவும், கோப்புகளில் கையெழுத்திடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதில் அக்கட்சியினர் ரூ.100 கோடி லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. எனினும், இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்ததலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசியஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐயும் அவரை கைது செய்தது. இந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், சிபிஐ கைது செய்ததால் சிறையில்இருந்து அவர் விடுதலையாக முடியவில்லை.

இதையடுத்து, சிபிஐ கைது செய்தது செல்லாது என அறிவிக்க கோரியும், ஜாமீன்கேட்டும் கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.10 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தின் அடிப்படையில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும், விசாரணை விரைவில் முடிய வாய்ப்பு இல்லைஎன்பதாலும் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. நீண்டகாலம் ஒருவரை சிறையில் வைத்திருப்பது அவரது சுதந்திரத்தை பறிக்கும் செயல் ஆகிவிடும். அதேநேரம் இந்த வழக்கு குறித்து எந்த ஒரு கருத்தையும் கேஜ்ரிவால் தெரிவிக்க கூடாது. அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் வழங்கியபோது விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் இந்த வழக்கிலும் பொருந்தும். முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ கேஜ்ரிவால் செல்ல கூடாது. துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுதொடர்பான எந்த ஒரு கோப்பிலும் கையெழுத்திட கூடாது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மற்றொரு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: கேஜ்ரிவாலின் மற்றொரு மனு மீது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். “கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும். இதில் சட்டப்படிதான் சிபிஐ செயல்பட்டுள்ளது” என நீதிபதி சூர்யகாந்த் தீர்ப்பளித்தார். நீதிபதி உஜ்ஜல் புயான் அளித்த தீர்ப்பில், “வழக்கு 22 மாதங்களாக நடந்துவரும்நிலையிலும் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்யவில்லை. ஆனால், அமலாக்கத் துறைவழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், சிறையில் இருந்து அவர் விடுதலையாக கூடாது என்ற நோக்கத்தில் சிபிஐ கைது செய்துள்ளதோ என சந்தேகம் ஏற்படுகிறது. கைதுக்கான காரணத்தை சிபிஐநியாயப்படுத்தவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கைதான ஆம் ஆத்மிமூத்த தலைவர்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத்ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கவிதா உள்ளிட்டோர் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத் துறை வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் திஹார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் நேற்று விடுதலையானார். கொட்டும் மழையில் வெளியே வந்த அவருக்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கேஜ்ரிவால் பேசியதாவது:

கொட்டும் மழையிலும் என்னை பார்க்க வந்துள்ள தொண்டர்களுக்கு நன்றி. என்வாழ்க்கை இந்த தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனது மன உறுதியைகுலைப்பதற்காக அவர்கள் என்னை சிறையில் தள்ளினர். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன். தற்போது என் மன உறுதி 100 மடங்குஅதிகரித்துள்ளது. நான் சத்தியத்தின் பாதையில் நடந்ததால் கடவுள் என்னுடன் இருக்கிறார். கடவுள் எனக்கு காட்டிய பாதையில் நடக்கிறேன். தொடர்ந்து தேசத்துக்காக சேவை ஆற்றுவேன். நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE