தீவிரவாதிகளை கூட ராகுல் சந்தித்து பேசுவார்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். ராகுல் ஒருநாள் தீவிரவாதிகளை கூட சந்தித்து பேசலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தெற்கு பெங்களூரு பாஜகஎம்.பி.யான தேஜஸ்வி சூர்யா,இதுகுறித்து நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் சந்திக்கும் நபர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க எம்.பி. இல்ஹான் ஒமர் போன்ற இந்திய விரோத சக்திகளை ராகுல் காந்தி சந்திக்கிறார். காலிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேச முகவர்களையும் அவர் சந்திக்கிறார். ராகுல் காந்தி ஒருநாள்தீவிரவாதிகளை சந்தித்து பேசினாலும் வியப்பேதும் இல்லை” என்றார்.

கர்நாடகாவின் மண்டியா அருகில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் குறித்து தேஜஸ்வி சூர்யா கூறுகையில், “இந்த சம்பவம் தற்செயலானது என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அவரது வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டால் அதை தற்செயலானது என்று அவர் கூறுவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE