உடல் உறுப்பு விற்பனையில் மம்தாவுக்கு தொடர்பு: பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா அரசு மருத்துவமனை யில் நடந்த உடல் உறுப்பு வியாபாரத்தில் மம்தாவுக்கு தொடர்புஇருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. படுகொலைக்கு நீதி கோரி கொல்கத்தா மருத்துவர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்துசம்மந்தப்பட்ட மருத்துவமனையிலும் மாநில சுகாதாரத்துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான டென்டர் விவகாரத்தில் முறைகேடு செய்தது போன்ற புகார்கள் பதிவானதால் அவரை சிபிஐ கைது செய்தது.

சி.பி.ஐ நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையிலிருந்து உரிமை கோரப்படாத சடலங்களில் இருக்கும் உறுப்புகள் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சந்தீப் கோஷுக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் உடல் உறுப்பு வியாபாரம் நடந்திருப்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கு தொடர்பான இரண்டு அறிக்கைகளின் இணைப்பு மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களை பாஜகஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில்பகிர்ந்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு:

ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் சிபிஐ நடத்திய விசாரணையில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரிகளில் ரூ.200 கோடி அளவுக்கு உடல் உறுப்பு வியாபாரம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மூளையாகச் செயல்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை மம்தா பானர்ஜி பாதுகாக்க விரும்புகிறார். மருத்துவக் கல்லூரியில் சந்தீப்கோஷ் உடல் உறுப்பு வியாபாரம் செய்வதை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி கண்டுபிடித்ததால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டாரா? உடல் உறுப்புவியாபாரத்தில் தானும் பலனடைந்து இருப்பதால்தான் சந்தீப்கோஷை மம்தா பாதுகாக்க முயற்சிக்கிறாரா? எல்லாம் மம்தாவின் தயவில்தான் நடக்கிறதா?

மேற்கு வங்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவருக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையெனில், அவர் திறமையற்றவராவார். அப்படியானால் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கவேண்டும். பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட இரவில் பணியிலிருந்த சவுத்ரிக் ராய், அவிக் தே,சவுரவ் பால் ஆகிய 3 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மூன்று பேரும் வலுவான அரசியல் தொடர்புடையவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு மருத்துவர்கள் கடிதம்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: மாண்புமிகு தலைவர்கள் என்ற முறையில் எங்கள் பிரச்சினைகளை பணிவுடன் உங்கள் முன் வைக்கிறோம். மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சக பெண் ஊழியருக்கு நீதி கிடைத்தால்தான் மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் உள்ள சுகாதார நிபுணர்களாகிய நாங்கள் எங்கள் கடமைகளை பொதுமக்களுக்கு அச்சமின்றி செய்ய முடியும்.

போராட்டம் தொடங்கியது முதல் எங்களுக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இந்த சோதனையான தருணத்தில் உங்களின் தலையீடு எங்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக வெளிச்சத்தை தரும். எங்களை சூழ்ந்திருக்கும் இருளும் விலகும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேற்கு வங்க அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், அவர்கள் பேச்சுவார்ததையில் பங்கேற்கவில்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்களுக்காக காத்திருந்த மம்தா பானர்ஜி மக்களின் நலன் கருதி பதவி விலகவும் தயாராக இருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE