சாலையில் தீப்பற்றி எரிந்த காரில் போலி ரூ.2000 நோட்டு கட்டுகள்: நாட்றாம்பள்ளி போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

நாட்றாம்பள்ளி: நாட்றாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (58). இவர், மேட்டூரில் இருந்து சென்னைக்கு நேற்று காரில் பயணித்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்தபையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது கார்திடீரென தீப்பற்றியது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நாட்றாம்பள்ளி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். பின்னர், காரில் இருந்த டிக்கியைத்திறந்து பார்த்தபோது அதில் போலி2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தீயில் பாதி எரிந்தநிலையில் அவற்றை போலீஸார் மீட்டனர்.

இதுதொடர்பாக, அபி நரசிம்மனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது அவர் கூறியதாவது: சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் ‘அபி பிக்சர்ஸ்’ என்ற சினிமாதயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறேன். கடந்த 2018-ம்ஆண்டு ‘கொலைகாரன்பேட்டை’ என்ற திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதை காரில் வைத்திருந்தேன். 2019-ல் கரோனாவால் படம் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதால், மேட்டூரில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை காரில் கொண்டு செல்லும்போது தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்தார். இருப்பினும் போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE