செபி தலைவருக்கு எதிராக லோக்பாலில் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா புகார்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: செபி தலைவர் மாதபி புரி புச்-க்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லோக்பாலில் வெள்ளிக்கிழமை புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாதபி புரி புச்-க்கு எதிராக எனது லோக்பால் புகார் மின்னணு வழியாகவும், நேரடியாகவும் பதிவு செய்யப்பட்டது. 30 நாட்களுக்குள் லோக்பால் அதனை சிபிஐ அல்லது அமலாக்கத் துறைக்கு முதல்கட்ட விசாரணைக்கு அனுப்ப வேண்டும். பின்பு முழுமையான விசாரணைக்கு அனுப்ப வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து ஒவ்வொரு விஷயங்களும் விசாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் புகார் குறித்த படங்களையும் பகிர்ந்துள்ளார். தனது மூன்று பக்கக் கடிதத்தில் மஹுவா மொய்த்ரா, “இந்த விவகாரத்தில் தேசத்தின் நலனும், கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் நலன்களும் சம்மந்தப்பட்டிருப்பதால் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

“அதானி குழுமத்தின் சந்தேகத்துக்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. இப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச், அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்தினாலேயே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது.

இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று செபி தலைவர் மறுத்திருந்தார். அதேபோல், அதானி குழுமமும், எங்களது குழுமத்துக்கு தனிநபர்கள் உடன் வணிக உறவுகள் எதுவும் இல்லை தெரிவித்திருந்தது. முன்னதாக, செபி தலைவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE