டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும்: பாஜக

By செய்திப்பிரிவு

டெல்லி: ஜாமீன் நிபந்தனைகளை சுட்டிக்காட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அந்த நிபந்தனைகள் மூலம் கேஜ்ரிவால் தான் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவருக்கு கண்ணாடி காட்டப்பட்டுள்ளது.

ஜெயில்வாலாவாக (சிறைவாசியாக) இருந்த முதல்வர் கேஜ்ரிவால் இனி பெயில்வாலாவாக (ஜாமீன் பெற்றவராக) இருப்பார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டெல்லி மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவருக்கு துளி கூட தார்மிகம் இல்லாததால் அதை அவர் செய்ய மாட்டார். ஒரு அரசியல்வாதி ஒரு குற்றச்சாட்டு வந்தாலும் பதவி விலக வேண்டும். ஆனால், 6 மாதங்கள் சிறையில் இருந்தபோதும், அவர் ராஜினாமா செய்யவில்லை. இப்போது அவர் குற்றம் சாட்டப்பட்டவர்.

தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்பது நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலின் வாதமாக இருந்தது. ஆனால், கேஜ்ரிவாலின் கைது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது. வழக்கில் இருந்து கேஜ்ரிவால் விடுவிக்கப்படவில்லை. விசாரணை தொடரும் என்பதால் விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி, அரவிந்த் கேஜ்ரிவாலின் பாஸ்போர்ட் உச்ச நீதிமன்றத்திடம் இருக்கும். அவரால் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு முறை திங்கள் மற்றும் வியாழன் தோறும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராக வேண்டும். சாட்சியிடம் பேச முடியாது.

அரவிந்த் கேஜ்ரிவால் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்ல வேண்டும். ஊழல்வாதி அரவிந்த் கேஜ்ரிவால் என்றாவது ஒரு நாள் தலைகுனிவார். அவரிடமிருந்து ராஜினாமாவை மக்கள் வாங்குவார்கள்” என தெரிவித்தார்.

தார்மிக அடிப்படையில் முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவாவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “கேஜ்ரிவாலிடம் ஏதேனும் தார்மிகம் இருந்தால், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மிக்கும் எந்த தார்மிக குணமும் இல்லை. அவர்கள் 'வாய்மையே வெல்லலும்' என்ற உண்மையான உணர்விலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். வாய்மைமே வெல்லும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொன்னாலும், கைது சட்டபூர்வமானது என்று உச்ச நீதிமன்றமும் சொல்கிறது.

ஆம் ஆத்மி கட்சி 'கிளப்' ஆகிவிட்டது. உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான அவதானிப்புகளை கொண்டுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது சட்டப்பூர்வமானது. கலால் கொள்கை ஊழல் தொடர்பான உண்மைகள் மற்றும் ஆதாரங்களில் நீதிமன்றம் திருப்தி அடைந்துள்ளது. நீதிமன்ற நடைமுறைப்படி, அனைவருக்கும் ஜாமீன் கிடைக்கும். லாலு யாதவ் உள்ளிட்ட பலர் ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். கேஜ்ரிவால் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் நாளில், அவரும் அவருடன் உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE