செப்.18 - 20 வரை வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூடுகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா 2024 குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் செப்.18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், செப்.18-ம் தேதி, சிறுபான்மையினர் நலத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள்
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா 2024 நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இருக்கின்றனர். செப்.19-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு, நிபுணர்கள் மற்றும் இந்த விவகாரம் தொடர்பானவர்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற இருக்கிறது. 20-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு அஜ்மீரில் உள்ள அகில இந்திய சஜ்ஜதனசின் கவுன்சில், டெல்லியில் உள்ள முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மற்றும் டெல்லியில் உள்ள பாரத் ஃபர்ஸ்ட் ஆகிவைகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நான்காவது கூட்டம் செப்.6-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது, இந்திய தொல்லியல் துறையினைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர். ஸாகத் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தெலங்கானா வக்ஃப் போர்டு உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 தொடர்பான தங்களின் பார்வைகள், ஆலோசனைகள் தெரிவித்தனர்.

இதனிடையே, வக்ஃப் மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டங்களில் எதிர்க்கட்சிகள் இந்த புதிய திருத்த மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கூட்டங்களில் காரசாரமாக விவாதம் நடத்தி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE