ஹரியானாவில் 89 தொகுதியில் காங். போட்டி: மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ (எம்) கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைய இருந்த நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் பட்டியலை பகுதி பகுதியாக வெளியிட்டு வந்தது. நேற்றுமுன்தினம் 40 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இந்நிலையில், நேற்று 4,5,6-வது பட்டியலைஅடுத்தடுத்து வெளியிட்டது.

மொத்தமாக 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ(எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 28 பேருக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பத்திரிகையாளர் சர்வ மித்ர கம்போஜ்ஜுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE