ஐஐடி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை, திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி.க்கள் உள்ளன, அவை இந்திய அரசால் நிறுவப்பட்ட உச்ச அமைப்பான ஐ.ஐ.டி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒன்றிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், இந்த கவுன்சிலின் அதிகாரபூர்வ தலைவராக பணியாற்றுகிறார்.

ஐஐடி.களில் ஆசிரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பில் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.யினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஐ.ஐ.டி கவுன்சிலின் தலைவர் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான இந்த இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா அல்லது இந்த ஐ.ஐ.டிகளில் வெறும் உதட்டளவில் மட்டுமே உள்ளதா என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

ஒரு உதாரணமானது சில சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் கிரண்குமார் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், காந்திநகர் ஐஐடியில் அரசியலமைப்பு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததை வெளிப்படுத்துகிறது.

இங்கு மொத்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 190. இதில் தற்போது பொதுப் பிரிவில் 116 பேரும், ஓபிசி பிரிவில் 8 பேரும், எஸ்சி பிரிவில் 7 பேரும், எஸ்டி பிரிவில் 4 பேரும் என மொத்தம் 135 பேராசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அரசியலமைப்பு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை மீறுகிறது.

ஐஐடி கவுன்சிலின் தலைவர் என்கிற முறையில், ஒன்றிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விளிம்புநிலை பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அவ்வப்போது மறுபரிசீலனை செய்வதும், ஏதேனும் பிறழ்ச்சி இருந்தால் அதற்கு அந்தந்த ஐஐடி.களின் இயக்குநர்களை பொறுப்பேற்கச் செய்வதும், ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குவதும் அவசியம் ஆகும்.

எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை இந்த சமூகங்களுக்கு எதிரான வன்கொடுமைகளாகக் கருதி, துறைத் தலைவர்களுக்கான தண்டனை உட்பட அந்தந்த சட்டங்களில் திருத்தங்களை முன்மொழியுமாறு மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், வீரேந்திர குமார், அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்.

விளிம்புநிலை சமூகங்களை மைய அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலமே சமூக நீதியை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்த முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE